சுடச்சுட

  

  40 எம்எல்ஏக்கள் தொடர்பான கருத்து : மோடியின் வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்: திரிணமூல் காங்கிரஸ்

  By DIN  |   Published on : 01st May 2019 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mamtha


  மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 40 பேர் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்த நிலையில், அவர் குதிரை பேரத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், இதற்காக வாராணசி தொகுதியில் அவர் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என்றும் திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
  மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் மோடி திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தபோது, பொதுத் தேர்தலுக்குப் பிறகு, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை அவரது கட்சி எம்எல்ஏக்கள் கைவிட்டுவிட்டு, பாஜகவில் சேருவார்கள் என்றும், திரிணமூலை சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் தம்முடன் பேச்சு நடத்தி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  ஹூக்ளி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை பேசியபோது கூறியதாவது:
  பாஜகவுடன் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 40 பேர் பேச்சு நடத்தி வருவதாக மோடி நேற்று தெரிவித்துள்ளார். வெட்கமில்லாமல் குதிரை பேரத்தில் அவர் ஈடுபட்டிருப்பதை மக்கள் காண வேண்டும்.  இதற்காக தேர்தலில் போட்டியிட அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பிரதமராக தொடர்ந்து இருக்கும் உரிமை அவருக்கு இல்லை. நேதாஜி போன்ற தேசிய தலைவர்கள் மக்களால் மதிக்கப்படுகிறார்கள்; விரும்பப்படுகிறார்கள். ஆனால் மோடி, கப்பார் சிங் (சோலே படத்தின் வரும் கதாபாத்திரம்) போன்ற மக்கள், இதற்கு விதிவிலக்கானவர்கள். அச்சத்தை தருபவர்கள். கடந்த 5 ஆண்டுகளில் மோடி என்ன பணி செய்துள்ளார்? விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்து விட்டது.
  மேற்கு வங்கத்தில் பாஜகவால் ஒருபோதும் தடம்பதிக்க முடியாது. எவ்வளவு பகல்கனவு கண்டாலும் அது நிறைவேறாது. மோடியின் கனவு உண்மையாகாது என்று மம்தா பானர்ஜி கூறினார்.
  தேர்தல் ஆணையத்துக்கு திரிணமூல் கட்சி கடிதம்: இந்த விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. 
  அந்தக் கடிதத்தில், மோடியின் பேச்சிலிருந்து, அவர் குதிரை பேரத்தில் ஈடுபடலாம் என்பது சூசகமாக தெரிகிறது. தனது பேச்சுக்கு ஆதாரம் அளிக்கும்படி, பிரதமரிடம் தேர்தல் ஆணையம் கேட்க வேண்டும். அதை அவர் அளிக்க தவறும்பட்சத்தில், மிரட்டல் விடுக்கும் வகையிலும், ஜனநாயக விரோதமாகவும் பேசி, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய காரணத்துக்காக, அவரது வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai