காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் சிறையில் அடைக்கப்பட மாட்டார்கள்: ராகுல் காந்தி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வேளாண் கடனைத் திருப்பிச் செலுத்தாத விவசாயிகள் சிறையில் அடைக்கப்பட மாட்டார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் சிறையில் அடைக்கப்பட மாட்டார்கள்: ராகுல் காந்தி


காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வேளாண் கடனைத் திருப்பிச் செலுத்தாத விவசாயிகள் சிறையில் அடைக்கப்பட மாட்டார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள திகம்கர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும், சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறைப்படுத்தப்பட்டதாலும், தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்தது. இதனால், லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். அன்றாடச் செலவுகளுக்குக் கூட மக்கள் பணம் இல்லாமல் தவித்தனர். 
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டமான நியாய் மூலம், மாதத்துக்கு ரூ.12,000க்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைப் போன்று, நியாய் திட்டமும் புந்தேல்கண்ட் பகுதி மக்களுக்குப் பெரும் பயனளிக்கும். இந்தியப் பொருளாதாரத்தை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்ல நியாய் திட்டம் உதவும்.
ஓராண்டில் 22 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும். 10 லட்சம் இளைஞர்களுக்கு கிராம பஞ்சாயத்துகளில் பணி வழங்கப்படும். இளைஞர்களால் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்கள், முதல் 3 ஆண்டுகளுக்கு அரசிடமிருந்து அனுமதி எதுவும் பெறத் தேவையில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாத விவசாயிகள் எவரும் சிறையில் அடைக்கப்பட மாட்டார்கள். 
மோடியின் முகம் வாடிவிட்டது: மக்களவைக்கான நான்குகட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் முகம் வாடிவிட்டது. பயத்துடனும், தயக்கத்துடனும் அவர் பேசி வருகிறார். பாஜக தோற்றுவிடும் என்று அக்கட்சித் தலைவர்களுக்குத் தெரிந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில், காங்கிரஸ் ஆட்சி அமைக்கப் போவது உறுதி.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின் மூலம் இந்திய விமானப்படையிடம் இருந்து ரூ.30,000 கோடியைத் திருடி, அம்பானிக்கு பிரதமர் மோடி வழங்கியுள்ளார். இதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மீது விசாரணை நடத்தப்பட்டால், அவர்கள் இருவரும் நிச்சயம் தண்டனை பெறுவர். 
பணக்காரர்களே பயன்பெற்றனர்: கருப்புப் பணத்தை ஒழிக்கப்போவதாகக் கூறி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்ற பெயரில், நாட்டிலுள்ள 15 பெரும் பணக்காரர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை பிரதமர் மோடி கொடுத்துள்ளார். மக்கள் அனைவரும் பணத்தைப் பெறுவதற்காக வங்கி வாசல்களிலும், ஏடிஎம் வாசல்களிலும் நின்றனர். ஆனால், விஜய் மல்லையா, அனில் அம்பானி, மெஹூல் சோக்ஸி ஆகியோர் வங்கி வாசல்களில் நின்றார்களா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மக்களின் பணத்தைத் திருடினார் மோடி: தாமோ மாவட்டத்தில் நடைபெற்ற மற்றொரு பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
தில்லியில் பிரதமர் வீட்டின் முன் சென்று, அங்குள்ள பாதுகாப்புப் படை வீரர்களிடம் காவலாளி என்று கூறிப்பாருங்கள். உடனே அவர்கள், திருடன் என்று கூறுவார்கள். பணக்காரர்கள் பெற்ற ரூ.5.55 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தது நாட்டிலுள்ள அனைவருக்கும் தெரியும். அதன் காரணமாகவே, அவர்கள் அவ்வாறு கூறுவார்கள்.
பொதுமக்களின் பணத்தைத் திருடி, அதை பணக்காரர்களுக்கு அளிப்பதை மோடி வழக்கமாகக் கொண்டிருக்கிறார். முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, புந்தேல்கண்ட் பகுதியின் வளர்ச்சிக்காக ரூ.3,800 கோடி ஒதுக்கியிருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் இந்தப் பகுதி வளர்ச்சி அடையவேயில்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com