சர்ச்சை கருத்து: மோடிக்கு 72 ஆண்டுகள் தடை விதிக்க அகிலேஷ் வலியுறுத்தல்

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 40 எம்எல்ஏக்கள் தன்னுடன் பேசி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தது சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில்,
சர்ச்சை கருத்து: மோடிக்கு 72 ஆண்டுகள் தடை விதிக்க அகிலேஷ் வலியுறுத்தல்


திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 40 எம்எல்ஏக்கள் தன்னுடன் பேசி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தது சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், இந்த கருத்துக்காக அவருக்கு 72 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, மேற்கு வங்கத்தில் ஹூக்ளி மாவட்டம் மற்றும் பாரக்பூர் மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 40 எம்எல்ஏக்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். மக்களவைத் தேர்தல் முடிவில் பாஜக வெற்றி பெற்றதும் மம்தா பானர்ஜி கட்சிக்காரர்களே அவரைவிட்டு விலகி விடுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் இது குறித்து சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், நாட்டு மக்கள் அனைவரும் பிரதமர் கூறிய கருத்தை கேட்டீர்களா? 130 கோடி மக்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்த மோடி, தற்போது சட்டவிரோதமாக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதிலிருந்து அவருடைய உண்மையான முகம் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. இத்தகைய அவமானகரமான கருத்தைக் கூறியதற்காக, மோடிக்கு தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் அல்ல; 72 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின்போது, சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதற்காக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி, மத்திய அமைச்சர் மேனகா காந்தி உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com