பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபு மகனுக்கு ஆயுள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபு மகனுக்கு ஆயுள் சிறை


பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
சாமியார் ஆசாராம் பாபு, அவரது மகன் நாராயண் சாய் ஆகிய இருவரும் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக, சூரத் நகரைச் சேர்ந்த இரு சகோதரிகள் கடந்த 2013-ஆம் ஆண்டில் காவல் துறையிடம் புகார் அளித்தனர். சாமியாரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, கடந்த 2002-2005 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பலமுறை தன்னை நாராயண் சாய் பாலியல் வன்கொடுமை செய்ததாக, அந்தச் சகோதரிகளில் ஒருவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் ஜோத்பூர் நீதிமன்றம், ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
நாராயண் சாய் மீதான பாலியல் குற்றச்சாட்டை குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. அத்துடன் நாராயண் சாயின் உதவியாளர்களான இரு பெண்கள் உள்பட 4 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றம்சாட்டப்பட்டிருந்த 11 பேரில் 6 பேர் விடுவிக்கப்பட்டனர்.
நாராயண் சாய் உள்ளிட்டோருக்கான தண்டனை விவரத்தை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.கத்வி, செவ்வாய்க்கிழமை அறிவித்தார். அதன்படி,  அவருக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், நாராயண் சாயின் உதவியாளர்களான இரு பெண் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாராயண் சாயின் ஓட்டுநர் ரமேஷ் மல்கோத்ராவுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாராயண் சாய், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் குஜராத்தில் உள்ள லஜ்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com