மீண்டும் எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவது உறுதி:  சத்ருகன் சின்ஹா

மீண்டும் எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவது உறுதி:  சத்ருகன் சின்ஹா

மக்களவைத் தேர்தலில் தாமும், தமது மனைவியும் வெற்றி பெற்று எம்.பி.யாவது உறுதி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார்


மக்களவைத் தேர்தலில் தாமும், தமது மனைவியும் வெற்றி பெற்று எம்.பி.யாவது உறுதி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்காததால், அக்கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸில் சத்ருகன் சின்ஹா அண்மையில் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து, பிகார் மாநிலம், பாட்னா சாஹிப் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். இத்தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய சட்ட அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார்.
இதனிடையே, சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா, சமாஜவாதி கட்சியில் அண்மையில் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌ தொகுதி சமாஜவாதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். இத்தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய உள்துறை அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் வேட்பாளராக சத்ருகன் சின்ஹாவும், உத்தரப் பிரதேசத்தில் அக்கட்சியை எதிர்த்து போட்டியிடும் சமாஜவாதி வேட்பாளராக பூனம் சின்ஹாவும் போட்டியிடுவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாட்னாவில் பிடிஐ செய்தியாளருக்கு பேட்டியளித்த சத்ருகன் சின்ஹாவிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
பாட்னா சாஹிப் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் ரவிசங்கர் பிரசாத், தனிப்பட்ட முறையிலான விமர்சனத்தை முன்வைப்பதில்லை. இதற்கு எனது பாராட்டுகள்,  வரவேற்பை தெரிவித்து கொள்கிறேன். ரவிசங்கர் பிரசாத் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர் சிறந்த கல்வியாளர். நல்ல குடும்பத்திலிருந்து வந்த நல்ல மனிதர் அவர். பாட்னா சாஹிப் தொகுதியில் எங்களுக்கு இடையேயான போட்டி, 2 சித்தாந்தங்களுக்கு இடையேயான போட்டியாகும்.
லக்னௌ தொகுதிக்கு சென்று எனது மனைவி பூனம் சின்ஹாவுக்காக பிரசாரம் செய்ய இருக்கிறேன். இது பத்னி தர்மம் ஆகும். இதற்கு சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம். ஆனால் நான் நேர்மையான, வெளிப்படையான, தெளிவான நபர் ஆவேன். நான் எதை செய்தாலும், அதை மாயாவதி, அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு தெரிந்தும், அவர்களின் ஒப்புதலுடனேயே செய்வேன்.
உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜவாதி கூட்டணி அபாயகரமான கூட்டணியாகும். இதில் சமாஜவாதி வேட்பாளராக போட்டியிடும் எனது மனைவிக்காக பிரசாரம் செய்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. இதற்கு முன்பு, விஜய ராஜே சிந்தியா, அவரது மகன் மாதவ் ராவ் சிந்தியா ஆகியோர் எதிரெதிர் அணியில் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களாக போட்டியிட்டுள்ளனர். இதைப் போல மேலும் பல உதாரணங்களை தெரிவிக்க முடியும் என்றார் சத்ருகன் சின்ஹா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com