ராகுல் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள்: காங்கிரஸ் கண்டனம்

குடியுரிமை விவகாரம் தொடர்பாக ராகுலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை வன்மையாகக் கண்டித்துள்ள காங்கிரஸ்


குடியுரிமை விவகாரம் தொடர்பாக ராகுலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை வன்மையாகக் கண்டித்துள்ள காங்கிரஸ் கட்சி, தோல்வியடைந்துவிட்ட பிரதமர், அபாண்டமான குற்றச்சாட்டுகளை நாள்தோறும் வெளியிட்டு வருகிறார் என்று விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
நாட்டில் உள்ள வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் நசிவு, கருப்புப் பணம் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியால் பதிலளிக்க முடியவில்லை. நாட்டில் உள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதில் தோல்வியடைந்துவிட்ட பிரதமர், அபாண்டமான குற்றச்சாட்டுகளை நாள்தோறும் கூறி வருகிறார். இந்த வகையில் ராகுல் காந்தி மீது பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராகுலின் குடியுரிமை தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டு கூறப்பட்டு, அது தவறு என்பதும் நிரூபிக்கப்பட்டுவிட்டது. இப்போது மீண்டும் தேர்தல் ஆதாயத்துக்காக அந்தப் பொய்க்கு புத்துயிர் கொடுத்துள்ளனர். ராகுல் காந்தி இந்தியாவில் பிறந்த இந்தியக் குடிமகன். கடந்த  மூன்று தலைமுறைகளாக அவரது குடும்பம் நமது நாட்டுக்காக செய்த தியாகங்களை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள் என்றார் சுர்ஜேவாலா.
பிரியங்கா காந்தி கண்டனம்: ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டுள்ள அவரது சகோதரி பிரியங்கா இது தொடர்பாக கூறியதாவது:
இதுபோன்ற மோசமான விஷயத்தை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. ராகுல் காந்தி இந்நாட்டில் பிறந்து இந்நாட்டிலேயே வளர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் இந்தியர் என்பதை இந்தியர்கள் அனைவரும் அறிவர். மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தோல்வி பயத்தில் இதுபோன்ற அவதூறான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள் என்றார்.
மர்மங்கள் நிறைந்தவர் ராகுல் - பாஜக: பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராகுல் காந்தி எந்த நாட்டு குடியுரிமை பெற்றவர் என்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. குடியுரிமை குறித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள அவர், இது தொடர்பாக உரிய பதிலளிக்க வேண்டும். உரிய ஆவணங்களின் அடிப்படையில்தான் ராகுல் காந்தி எந்த நாட்டு குடியுரிமை வைத்துள்ளார் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ராகுல் காந்தி எப்போதும் குழப்பங்களும், மர்மங்களும் நிறைந்த நபராகவே உள்ளார். ராகுல் லண்டனைச் சேர்ந்தவரா இல்லை தில்லியைச் சேர்ந்தவரா என்பது குறித்து உண்மையான விவரம் தேவை என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com