சுடச்சுட

    

    கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை சிபிஐ காவலுக்கு அனுப்ப போதிய ஆதாரம் உள்ளதா?: உச்சநீதிமன்றம் ஆராய முடிவு

    By DIN  |   Published on : 02nd May 2019 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SUPREMEcourtcut


    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிப்பதற்கு போதிய ஆதாரம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    மேற்கு வங்கத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம், பொதுமக்கள் முதலீடு செய்த கோடிக்கணக்கான ரூபாயைத் திருப்பித் தரவில்லை. அந்த நிறுவனத்தின் மோசடி புகார்களை கொல்கத்தா காவல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வந்தது. இந்த வழக்கு கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒப்படைத்தது.
    இதனிடையே, இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களை ராஜீவ் குமார் அழித்து விட்டதாக, சிபிஐ குற்றம்சாட்டியது.  அவரிடம் சிபிஐ விசாரணை நடத்த முயன்றபோது, அவர்களை மேற்கு வங்க காவல் துறை தடுத்து விட்டது. பின்னர், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் ராஜீவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சய் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன்வைத்த வாதம்:
    இந்த வழக்கில், செல்வாக்கு மிக்க சிலருக்குத் தொடர்பு உள்ளது. அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, தடயங்களை ராஜீவ் குமார் அழித்து விட்டார். அதற்கான முகாந்திரம் கிடைத்துள்ளது. எனவே, அவரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று துஷார் மேத்தா வாதிட்டார்.
    அவரது கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க அரசு மற்றும் ராஜீவ் குமார் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டதாவது:
    ராஜீவ் குமார் ஆதாரங்களை அழித்துவிட்டதாக சிபிஐ கூறுகிறது. பிறகு ஏன் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படாமல் உள்ளது. ஏற்கெனவே, ஷில்லாங் நகரில் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் 5 நாள்கள், 40 மணி நேரம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின்போது ராஜீவ் குமார், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கத்துடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சிபிஐக்கு  அனுமதி வழங்கக் கூடாது என்றார் அவர்.
    அதைத் தொடர்ந்து, ராஜீவ் குமாரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிப்பதற்கான தேவை உள்ளதா என்று முதலில் ஆய்வு செய்யப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், வழக்கின் அடுத்த விசாரணை வியாழக்கிழமை( மே 2) நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai