சுடச்சுட

  

  மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விரிவான விசாரணை

  By DIN  |   Published on : 02nd May 2019 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  abisek_manu_singvi


  மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ரஃபேல் ஒப்பந்தம்  குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.
  தில்லியில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
  மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் ஆட்சியமைத்ததும், வேளாண் கடனை காங்கிரஸ் எப்படி தள்ளுபடி செய்ததோ, அதேபோல், மத்தியில் எந்த நாளில் ஆட்சியமைக்கிறதோ, அன்றைய தினத்தில் இருந்து 72 மணி நேரம் அல்லது 3 நாள்களில், ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடும். தற்போதைக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்குதான் காங்கிரஸ் வலியுறுத்தியது. ஆனால் உண்மையில் அதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதியவும், கிரிமினல் விசாரணைக்கு உத்தரவிடவும் காங்கிரஸ் தயங்காது.
  பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறியது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் 10 மனுக்களை காங்கிரஸ் அளித்துள்ளது. ஆனால் அதன் மீது தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
  இதே குற்றச்சாட்டின்கீழ், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம், பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஆச்சரியத்தை தருகிறது. இதிலிருந்து அவர்களுக்கு எதிரான மனுக்கள் மீது முடிவெடுப்பதில்லை என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துவிட்டது போலத் தெரிகிறது. ஆதலால் தேர்தல் ஆணையத்தை இயங்க செய்ய உச்சநீதிமன்றத்தில் மனு தொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
  கட்சியின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் இருப்பதை நீதி தாமதிக்கப்படுவது நீதி மறுக்கப்பட்டதற்கு சமம் என்றே காங்கிரஸ் கருதுகிறது. மக்களவைக்கு 4 கட்டத் தேர்தல்கள் ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டன. இன்னும் 200 தொகுதிகளுக்குதான் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. ஏற்கெனவே  ஏற்படுத்தப்பட்ட பாதிப்பை சரி செய்ய முடியாது. பழைய நிகழ்வுக்கு நம்மால் திரும்பிச் செல்லவும் முடியாது. ஆனால் இனியாவது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட மோடி, அமித் ஷா ஆகியோருக்கு 72 மணி நேரம், 52 மணி நேரம் அல்லது 96 மணி நேரம் தடை விதிக்க வேண்டும்.
  தேர்தல் ஆணையத்தை விட, தேர்தல் நடத்தை நெறிமுறைகளை விட, மோடியோ அல்லது அமித் ஷாவோ பெரியவர்கள் கிடையாது. வாஜ்பாய், வி.பி. சிங், தேவெ கௌடா ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோது, இந்தளவுக்கு தேர்தல் நெறிமுறைகளை மீறியது கிடையாது. மிகப்பெரிய காவலாளியான தேர்தல் ஆணையம், மோடி, அமித் ஷா விவகாரத்தில் மட்டும் தனது கடமையை செய்யவில்லை என்றார் சிங்வி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai