சுடச்சுட

  

  ஸ்ரீநகர்பாரமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக் கட்டுப்பாடு ரத்து

  By DIN  |   Published on : 02nd May 2019 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ஜம்முகாஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் பொது மக்களுக்கான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
  ஜம்முஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படைகளின் வாகனங்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக, ஸ்ரீநகருக்கும், பாரமுல்லாவுக்கும் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமைகளிலும், புதன்கிழமைகளிலும் அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை, பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை மே மாதம் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் மாநில அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களிலும் ஈடுபட்டன. மாநிலத்தில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருவதாக அக்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தன.
  ஜம்முகாஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பாதுகாப்புப் படையினர் மீது ஜெய்ஷ்ஏமுகமது பயங்கரவாதி நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்ளும்பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜம்முகாஷ்மீர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
  இந்நிலையில், ஸ்ரீநகர்பாரமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கப் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முற்றிலும் நீக்கப்படுவதாக மாநில நிர்வாகம் புதன்கிழமை தெரிவித்தது. இது தொடர்பாக மாநில நிர்வாக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
  பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்வதை மாநில நிர்வாகம் உறுதி செய்துவருகிறது. குல்காம் மற்றும் அனந்த்நாக் மாவட்டங்களில் மக்களவைத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்புப் படையினர் பயணம் மேற்கொள்வது தற்போது குறைந்துள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலையில் பயணம் மேற்கொள்ள பொது மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் வியாழக்கிழமையிலிருந்து முற்றிலுமாக நீக்கப்படுகின்றன. அதே வேளையில், ஸ்ரீநகருக்கும், உதாம்பூருக்கும் இடையேயான நெடுஞ்சாலையில் பொது மக்களுக்கான தடைகள் தொடரும். அந்தப் பகுதியில் தடையை நீக்குவது குறித்து தொடர்ந்து ஆராய்ந்துவருகிறோம். அந்தப் பகுதியிலும் படிப்படியாகத் தடை விலக்கப்படும் என்றார் அவர்.
  முகல் சாலையில் போக்குவரத்து தொடக்கம்: கடும் பனிப்பொழிவு காரணமாகக் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த முகல் சாலையில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜெளரி மாவட்டங்களையும், மாநிலத்தின் மற்ற பகுதிகளையும் இணைக்கும் 84 கி.மீ. நீளம் கொண்ட இந்தச் சாலையில், தற்போது ஒருவழிப் போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து காவல் துறை ஆணையர் தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai