மோடி, அமித் ஷா மீது புகார்: மே 6-ஆம் தேதிக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

பிரதமர் மோடி, அமித் ஷா மீதான புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் மே 6-ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மோடி, அமித் ஷா மீது புகார்: மே 6-ஆம் தேதிக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு


பிரதமர் மோடி, அமித் ஷா மீதான புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் மே 6-ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

17-வது மக்களவைத் தேர்தலை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த மார்ச் 10-ம் தேதி அறிவித்தார். அன்றைய தினத்தில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்த தேர்தல் நடத்தை விதிகள் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் மே 23-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதாகவும், அதுதொடர்பாக புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மிதா தேவ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை செவ்வாய்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, "மோடி மற்றும் அமித் ஷா தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சி 11 புகார்களை அளித்துள்ளது. அதில் ஏற்கெனவே 2 புகார்கள் மீது முடிவு எடுக்கப்பட்டுவிட்டது" என்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. 

இதைத்தொடர்ந்து, வழக்கு தொடர்ந்த சுஷ்மிதா தேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.எம். சிங்க்வி, "காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் மோடி, அமித் ஷாவுக்கு எதிராக 11 புகார்களை அளித்துள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் இதுவரை 2 புகார்கள் குறித்து மட்டுமே முடிவெடுத்துள்ளது" என்றார். 

இதையடுத்து, "இந்த வழக்கு குறித்து அடுத்தகட்டமாக திங்கள்கிழமை (மே 6-ஆம் தேதி) விசாரிக்கப்படும். அதற்குள் மீதமுள்ள புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கவேண்டும்" என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com