காங்கிரஸார் என்னைக் கொல்லவும் கனவு காண்கின்றனர்: பிரதமர் நரேந்திர மோடி

காங்கிரஸ் கட்சியினர் என்னைக் கொல்லவும் கனவு காண்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். நேர்மையற்ற காங்கிரஸ் கட்சி, குடும்ப அரசியலையும், ஊழலையுமே ஊக்குவிக்கிறது என்றும் அவர் சாடினார். 
காங்கிரஸார் என்னைக் கொல்லவும் கனவு காண்கின்றனர்: பிரதமர் நரேந்திர மோடி


காங்கிரஸ் கட்சியினர் என்னைக் கொல்லவும் கனவு காண்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். நேர்மையற்ற காங்கிரஸ் கட்சி, குடும்ப அரசியலையும், ஊழலையுமே ஊக்குவிக்கிறது என்றும் அவர் சாடினார். 
மத்தியப் பிரதேச மாநிலம், இடார்சியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: 
வளர்ச்சித் திட்டங்களை கிடப்பில் போடுவதே காங்கிரஸின் கலாசாரமாகும். மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது முதல், மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு, நீர்ப்பாசன திட்டங்களை விரைவுபடுத்தாத ஆளும் காங்கிரஸின் கொள்கைகளே காரணமாகும். 
எதிலுமே நேர்மையற்ற கட்சியாக இருக்கும் காங்கிரஸ், குடும்ப அரசியலையும், ஊழலையும் ஊக்குவிப்பதில் மட்டும் நேர்மையுடன் நடந்துகொள்கிறது. ஆனால் பாஜக, ஒட்டுமொத்த வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. 
என் மீது அதிக துவேஷம் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியினர், என்னைக் கொல்லவும் கனவு காண்கின்றனர். ஆனால், மத்தியப் பிரதேச மக்களும், நாட்டு மக்களும் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர். 
போபால் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான திக்விஜய் சிங், சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகரான ஜாகிர் நாயக்கை உயர்வாகப் பேசி, அவரைக் கொண்டாடுகிறார். பயங்கரவாதம் தொடர்பாக காவல்துறையினரிடையே உரையாற்றுமாறு ஜாகிர் நாயக்குக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. முந்தைய அரசுகள் ஜாகிர் நாயக்கை அமைதியின் தூதராக முன்னிலைப்படுத்த முயற்சித்தன. 
எதிர்க்கட்சித் தலைவர்களில் பலருக்கு பிரதமராகும் எண்ணம் இருக்கிறது. ஆனால், அவர்களில் ஒருவருக்குக் கூட அதற்கான திறமை இல்லை. 55 ஆண்டுகள் நீடித்த ஒரு குடும்பத்தின் ஆட்சி வேண்டுமா, அல்லது ஒரு தேநீர் வியாபாரியின் 55 மாத ஆட்சி வேண்டுமா என்பதை இந்தத் தேர்தலில் மக்கள் முடிவு செய்ய வேண்டும். 
புல்வாமா தாக்குதல் சம்பவத்தை அடுத்து, பாலாகோட் பகுதியில் இந்திய விமானப் படை நிகழ்த்திய அதிரடி பதிலடித் தாக்குதலின் வலியை பாகிஸ்தானால் வெளிப்படுத்தவும் இயலவில்லை; அதை மறைக்கவும் முடியவில்லை. 
உங்களது (மக்கள்) ஒரு வாக்கு, நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com