நக்ஸலைட் தாக்குதல்: 15 வீரர்கள் பலி: மகாராஷ்டிரத்தில் சம்பவம்

மகாராஷ்டிரத்தில் நக்ஸலைட் தீவிரவாதிகள் புதன்கிழமை நடத்திய திடீர் தாக்குதலில் அதிரடிப்படை போலீஸார் 15 பேர் உள்பட 16 பேர் பலியாகினர்.
மகாராஷ்டிர மாநிலம், கட்ச்ரோலியில் நக்ஸலைட்டுகள் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் சிதறிக் கிடக்கும் அதிரடிப்படை போலீஸார் சென்ற வாகனம்.
மகாராஷ்டிர மாநிலம், கட்ச்ரோலியில் நக்ஸலைட்டுகள் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் சிதறிக் கிடக்கும் அதிரடிப்படை போலீஸார் சென்ற வாகனம்.


மகாராஷ்டிரத்தில் நக்ஸலைட் தீவிரவாதிகள் புதன்கிழமை நடத்திய திடீர் தாக்குதலில் அதிரடிப்படை போலீஸார் 15 பேர் உள்பட 16 பேர் பலியாகினர். இதேபோல், தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான 25 வாகனங்களையும் நக்ஸலைட் தீவிரவாதிகள் தீவைத்து எரித்தனர்.
அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்களால் மகாராஷ்டிரத்தில் பதற்றம் நிலவுகிறது.
இதுகுறித்த விவரம் வருமாறு:
மகாராஷ்டிர மாநிலம், கட்ச்ரோலி மாவட்டத்தில் உள்ள தாதாபூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அந்தப் பகுதிக்கு நக்ஸலைட் தீவிரவாதிகள் ஏராளமானோர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு வந்தனர். பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு டீசலை ஊற்றி நக்ஸலைட்டுகள் தீ வைத்தனர். இதில் அந்த வாகனங்கள் முழுவதும் எரிந்து தீக்கிரையாகின.
இதைத் தொடர்ந்து, நக்ஸலைட் தீவிரவாதிகள் அனைவரும் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு கட்ச்ரோலி மாவட்ட அதிரடிப்படை போலீஸார் விரைந்து வந்தனர்.
குர்ஹேதா பகுதியில் உள்ள லேன்தாரி நல்லா எனுமிடத்தில் அதிரடிப்படை போலீஸாரின் வாகனம் வந்தபோது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை நக்ஸலைட்டுகள் வெடிக்கச் செய்தனர். இதில் 15 அதிரடிப்படை போலீஸாரும், கிராமவாசி ஒருவரும் பலியாகினர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டு நக்ஸலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து மகாராஷ்டிர காவல்துறை டிஜிபி சுபோத் குமார் ஜெய்ஷ்வால் கூறுகையில், இதை உளவுத் துறைக்கு ஏற்பட்ட தோல்வியாக கூற முடியாது. இது மகாராஷ்டிர போலீஸாருக்கு மிகப்பெரிய இழப்பு ஆகும். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க போலீஸார் தயாராக உள்ளனர் என்றார்.


மகாராஷ்டிர தின கொண்டாட்டம் ரத்து: மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை மாலை மகாராஷ்டிர தின கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் விருது அளித்து கௌரவிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
நக்ஸலைட் தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ரத்து செய்து விட்டார்.
மகாராஷ்டிர முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ், நக்ஸலைட் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பதுடன், நக்ஸலைட் அச்சுறுத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடி கண்டனம்:  சுட்டுரையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், பாதுகாப்புப் படையினரை குறிவைத்து நடத்தப்பட்டுள்ள  தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன். பாதுகாப்புப் படையினருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். அவர்களது தியாகங்கள் எப்போதும் மறக்கப்படாது.
வீரர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.


ஃபட்னவீஸுடன் ராஜ்நாத் சிங் பேச்சு


நக்ஸலைட் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரிடம், நக்ஸலைட் தாக்குதல் குறித்து ஃபட்னவீஸ் விரிவாக விளக்கினார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com