நக்ஸல் தாக்குதல்: ஃபட்னவீஸ் ராஜிநாமா செய்ய வேண்டும்

மகாராஷ்டிர மாநிலம், கட்ச்ரோலியில் நக்ஸலைட்டுகள் தாக்குதலில் 16 பேர் பலியாகியிருப்பதன் எதிரொலியாக முதல்வர் பதவியிலிருந்து தேவேந்திர ஃபட்னவீஸ் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தேசியவாத
நக்ஸல் தாக்குதல்: ஃபட்னவீஸ் ராஜிநாமா செய்ய வேண்டும்


மகாராஷ்டிர மாநிலம், கட்ச்ரோலியில் நக்ஸலைட்டுகள் தாக்குதலில் 16 பேர் பலியாகியிருப்பதன் எதிரொலியாக முதல்வர் பதவியிலிருந்து தேவேந்திர ஃபட்னவீஸ் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் சரத் பவார் வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மகாராஷ்டிரத்தில் நக்ஸலைட்டுகளின் செயல்பாடு அதிகரித்து விட்டது. நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சட்டம்ஒழுங்குக்கு ஆட்சியாளர்கள் முக்கியத்துவம் கொடுக்காததினால்தான், கட்ச்ரோலி தாக்குதல் நடந்துள்ளது.
மாநில உள்துறை அமைச்சக இலாகா முதல்வர் ஃபட்னவீஸிடம்தான் உள்ளது. ஆதலால், காலம் தாமதிக்காமல் அவர் தனது முதல்வர் பதவியை உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும். பொதுமக்களின் எண்ணம் குறித்து கவலைப்படாதவர்களாக இருந்தாலும், மனசாட்சிக்கு வெட்கப்படுபவர்களாக இருந்தால், பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். ஆனால் ஆட்சியில் இருப்போர், அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் மாநில உள்துறை அமைச்சருமான ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்தில் நக்ஸலைட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மக்களை விரக்தியடைய செய்ய திட்டமிட்டு இத்தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். இதை நாம் அனுமதிக்கக் கூடாது என்றார்.
கட்ச்ரோலியில் நக்ஸலைட்டுகள் புதன்கிழமை அடுத்தடுத்து 2 இடங்களில் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் கண்ணிவெடித் தாக்குதலில் 15 போலீஸார் உள்பட 16 பேர் பலியாகினர். அதேபோல், சாலைக் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான வாகனங்களுக்கும் நக்ஸலைட்டுகள் தீ வைத்தனர். இந்தத் தாக்குதலில் 25 வாகனங்கள் தீக்கிரையாகின.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com