மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது பாஜக அரசு: பிரியங்கா

மக்களின் நம்பிக்கையை மத்திய பாஜக அரசு இழந்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச கிழக்குப்பகுதி பொது செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தபோது காங்கிரஸ் தொண்டர் இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்துடன் உரையாடும் பிரியங்கா.
உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தபோது காங்கிரஸ் தொண்டர் இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்துடன் உரையாடும் பிரியங்கா.


மக்களின் நம்பிக்கையை மத்திய பாஜக அரசு இழந்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச கிழக்குப்பகுதி பொது செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால், சமாஜவாதிபகுஜன் சமாஜ்ஆர்எல்டி கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பாஜகவுக்குதான் பாதிப்பு ஏற்படும். ஏனெனில், தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்கள் அல்லது பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வேட்பாளர்களுக்குதான் காங்கிரஸ் தேர்தலில் வாய்ப்பளித்துள்ளது.
வாராணசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவதில் எனக்கு எந்த பயமும் கிடையாது. யாரைக் கண்டும் எனக்கு பயம் கிடையாது. பயமிருந்தால் நான் வீட்டுக்குள்ளேயே இருந்திருப்பேன். அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன். அரசியலுக்கு நல்லது செய்யவே நான் வந்துள்ளேன். இந்தத் தேர்தலை 2022ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு காங்கிரஸை தயார்படுத்தும் செயலாக கருதி செயல்படவில்லை. மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே காங்கிரஸ் செயல்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் பலவீனமாக உள்ளது. ஆதலால் மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டியுள்ளது. அந்த கண்ணோட்டத்துடன் நான் கட்சி பணியாற்றுவேன்.
மக்களின் பிரச்னைகளைக் கேட்டு, அதற்கு தீர்வு காண்பதற்கு எனது சகோதரர் ராகுல் காந்தியை போல வேறு தலைவர்கள் யாரும் இல்லை. எனது குடும்பத்தினரை பாஜக குறிவைத்து செயல்படுகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது நாங்கள் எங்களது குடும்பத்தை பற்றி பேசுவதில்லை. மக்களின் பிரச்னைகள் குறித்து மட்டுமே பேசுகிறோம். ஆனால், பாஜக தலைவர்கள் தங்களது பிரசாரங்களில் எங்களின் குடும்பத்தைத்தான் குறிவைக்கின்றனர்.
வாராணசி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் மனசோர்வு அடையவில்லை. கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் கட்சியினருக்காக நான் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. அப்பகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டியுள்ளது. வாராணசி தொகுதியில் நான் போட்டியிட்டிருந்தால், பிற தொகுதிகளில் என்னால் கட்சியின் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய முடியாத நிலை வந்திருக்கும். கட்சியை வலுப்படுத்தும் பணியில் என்னால் ஈடுபட முடியாமல் போயிருக்கும்.
மத்திய பாஜக அரசு, மக்களுக்கு நீதி அளிக்கவில்லை. மக்கள் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். பாஜக மீதான நம்பிக்கையிலேயே அக்கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் மக்கள் அமர வைத்தனர். ஆனால் அந்த நம்பிக்கையை பாஜக சிதறடித்து விட்டது. இதனால் மத்திய பாஜக அரசு மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர் என்றார் பிரியங்கா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com