வாராணசியில் சமாஜவாதி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக களமிறக்கப்பட்ட சமாஜவாதி வேட்பாளரும்,


உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக களமிறக்கப்பட்ட சமாஜவாதி வேட்பாளரும், எல்லைப் பாதுகாப்பு படை(பிஎஸ்எஃப்) முன்னாள் வீரருமான தேஜ் பகதூர் யாதவின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் புதன்கிழமை நிராகரித்தது.
எல்லைப் பாதுகாப்பு படையில் வீரர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்று விடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் தேஜ் பகதூர் யாதவ். அதையடுத்து அவர் பிஎஸ்எஃப் படையில் இருந்து கடந்த 2017ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சூழலில், வாராணசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடுவதாக, கடந்த 24 ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். 
எனினும், அவரை தங்கள் கட்சி வேட்பாளராக சமாஜவாதி திங்கள்கிழமை அறிவித்தது. அதையடுத்து சமாஜவாதி சின்னத்தில் போட்டியிடுவதற்காக, மற்றொரு வேட்புமனுவை கடந்த 29ஆம் தேதி தேஜ் பகதூர் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இரண்டு வேட்புமனுக்களிலும் உள்ள தகவல்களில் வேறுபாடு இருப்பதாக தேர்தல் ஆணையம் தேஜ் பகதூருக்கு செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. அதில்,  சுயேச்சையாக போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவில், பிஎஸ்எஃப் படையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. சமாஜவாதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் பணி நீக்கம் தொடர்பான தகவல்கள் இல்லை என்று கூறப்பட்டிருந்தது. 
மேலும், இதுதொடர்பாக புதன்கிழமை காலை 11 மணிக்குள் தேஜ் பகதூர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதையடுத்து தேஜ் பகதூர் தனது தரப்பு விளக்கத்தையும், அதற்கான ஆவணத்தையும் தேர்தல் ஆணையத்திடம் புதன்கிழமை சமர்ப்பித்தார். எனினும் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. 
இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி கூறுகையில், மத்திய மற்றும் மாநில அரசில் பணியாற்றியவர்கள், லஞ்சம் அல்லது நம்பிக்கையின்மை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. அதனால் தேஜ் பகதூர் யாதவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்றார்.
உச்சநீதிமன்றத்தை அணுகுவேன்..: இந்நிலையில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து தேஜ் பகதூர் கூறுகையில், தேர்தல் ஆணையம் கேட்ட தகவல்களையும், ஆவணத்தையும் நான் அளித்து விட்டேன். அதையும் மீறி எனது வேட்புமனுவை நிராகரித்துள்ளனர். சர்வாதிகார ஆட்சி போல இங்கு அனைத்தும் நடைபெறுகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகுவேன் என்றார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து நான் போட்டியிடுவதை பாஜக விரும்பவில்லை; அதனால் நான் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு அவர்கள் சதி செய்து விட்டனர் என்று  தேஜ் பகதூர் யாவ் குற்றம்சாட்டியுள்ளார்.
வாராணசி தொகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடியை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால், இந்த முறை தேஜ் பகதூர் யாதவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். மோடிக்கு எதிராக தேஜ் பகதூர் நிற்பது கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் என்று தேர்தல் நிபுணர்கள் கூறி வந்தனர். இந்நிலையில்,  வேட்புமனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தேஜ் பகதூர் இழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com