வீரர்களின் உயிர்த் தியாகத்தை தேர்தலுக்கு பயன்படுத்துகிறது பாஜக: மாயாவதி குற்றச்சாட்டு

பாதுகாப்புப் படை வீரர்களின் உயிர்த் தியாகத்தை தேர்தல் பிரசாரங்களுக்காக பாஜக பயன்படுத்துகிறது என்று பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், நாட்டின் எல்லைப் பகுதிகள்
வீரர்களின் உயிர்த் தியாகத்தை தேர்தலுக்கு பயன்படுத்துகிறது பாஜக: மாயாவதி குற்றச்சாட்டு


பாதுகாப்புப் படை வீரர்களின் உயிர்த் தியாகத்தை தேர்தல் பிரசாரங்களுக்காக பாஜக பயன்படுத்துகிறது என்று பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், நாட்டின் எல்லைப் பகுதிகள் முழுமையாக பாதுகாப்பாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, பாரபன்கி பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மாயாவதி பேசியதாவது:
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை தனக்கு சாதகமாக அக்கட்சி பயன்படுத்திக் கொண்டது. அதேபோல இப்போது பாஜக அரசும் செயல்படுகிறது.
பாஜகவின் பிரிவினைவாத கொள்கைகள் மற்றும் முதலாளித்துவ கொள்கைக்காக, மக்களவைத் தேர்தலில் அக்கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும். 
பாஜகவின் வார்த்தை ஜாலங்கள் எதுவும் இந்தத் தேர்தலில் எடுபடாது. நானும் நாட்டின் காவலாளி என்ற  புதிய நாடகத்தை பாஜகவினர் தொடங்கியுள்ளனர். அதைக் கொண்டு தங்களைக்கூட அவர்களால் காத்துக் கொள்ள இயலாது. 
பாஜக அரசில் நாட்டின் எல்லைப் பகுதிகள் முழுமையாக பாதுகாப்பாக இல்லை. அதனால்தான் எல்லையில் தொடர்ந்து அத்துமீறல்களும், ஊடுருவல்களும் நிகழ்கின்றன. அதில் பல வீரர்கள் பலியாகினர். ஆனால், வீரர்களின் உயிர்த் தியாகத்தை தேர்தல் பிரசாரங்களுக்காக பாஜக பயன்படுத்தி வருகிறது.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, பெரிய அளவிலான வாக்குறுதிகளையும், கவர்ச்சிகரத் திட்டங்களையும் அனைத்து கட்சிகளும் அறிவித்து வருகின்றன. அதைக் கண்டு மக்கள் ஏமாந்துவிடக்கூடாது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, அளவுக்கு அதிகமான வாக்குறுதிகளை மோடி அளித்தார். ஆனால் அதில் கால் பங்கு வாக்குறுதிகளைக் கூட அவர் நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் நல்ல நாள்கள் வரும் என்றார். அத்தகைய நாள் இன்னும் வரவில்லை.
சட்டமேதை அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. கடந்த 1989-ஆம் ஆண்டு மத்தியில் தேசிய முன்னணி ஆட்சியமைக்க முன்னாள் பிரதமர் வி.பி. சிங் எங்களிடம் ஆதரவு கோரியபோது, இரு கோரிக்கைகள் வைத்தோம். அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது, மண்டல் கமிஷன் அறிக்கையை செயல்படுத்துவது. இரண்டுக்கும் வி.பி.சிங் ஒப்புக் கொண்டு அதை நிறைவேற்றினார். இது பிடிக்காத பாஜக, கூட்டணிக்கு வெளியில் இருந்து அளித்த ஆதரவை திரும்பப் பெற்றது.
இந்த இரண்டு கட்சிகளுமே அவர்களின் சுயலாபத்துக்காக மட்டுமே ஆட்சி செய்தனர். காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் மத்தியில் ஆட்சிக்கு வராதவாறு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் மாயாவதி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com