சுடச்சுட

  

  காங்கிரஸ் பிரிவினைவாத அமைப்பு என்பதை பிரியங்காவே ஒப்புக்கொண்டுவிட்டார்

  By DIN  |   Published on : 03rd May 2019 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jetly


  காங்கிரஸ் ஒரு பிரிவினைவாத அமைப்பு என்பதை அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்காவே ஒப்புக்கொண்டுவிட்டார் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
  தில்லியில், செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்த அருண் ஜேட்லி கூறியதாவது:
  தேர்தல் நடைபெறும்போது மட்டும் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஹிந்துக்களாக மாறிவிடுகின்றனர். தேர்தல் முடிந்தபிறகோ அல்லது அதற்கு முன்போ கோயில் குறித்து அவர்கள் சிந்திப்பதே இல்லை. ஆனால், தேர்தலின்போது மட்டும் கோயிலுக்குத் தவறாமல் செல்கின்றனர். விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளை வகுப்புவாத அமைப்பாக காங்கிரஸ் விமர்சித்தது. ஆனால், தற்போது ஹிந்துக்கள் போல அவர்கள் நடந்துகொள்கின்றனர். 
  உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்துவோம் அல்லது அவர்களின் வாக்குவங்கியைச் சிதறடிப்போம் என்று கூறியுள்ளார். இதன்மூலம், காங்கிரஸ் ஒரு பிரிவினைவாத அமைப்பு என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். நாட்டின் பழைமைவாய்ந்த கட்சிக்கே இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது. 
  முன்னாள் பிரதமர்கள் ஜவாஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி காலத்தில், காங்கிரஸ் கட்சி 300 முதல் 400 தொகுதிகளைக் கைப்பற்றியது. பின்னர், ராஜீவ் காந்தி காலத்தில், காங்கிரஸ் வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை 125 முதல் 150 ஆகக் குறைந்தது. தற்போது, வெறும் 40 முதல் 70 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றி வருகிறது.
  பிரிவினைக்கு ராகுல் ஆதரவு:
  இந்தியப் பிரிவினைக்கு ஆதரவாகப் பேசி வருபவர்களை காங்கிரஸ் தலைவர் ஆதரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) தேசத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய மாணவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கக் கூடாது என சில மாணவர் குழுக்கள் போராட்டம் நடத்தின. அதற்கு ராகுல் காந்தி நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தார்.
  இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி: மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்தது இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை, ராஜ்ஜிய ரீதியிலான நடவடிக்கை மற்றும் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். நமது தேசத்துக்கு கிடைத்த இந்த வெற்றி, நமது மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும். ஆனால்,  இதனைக் கொண்டாடினால், இதற்கு அரசியல் ரீதியாக விலை கொடுக்க வேண்டி வருமோ என்று பயந்து எதிர்க்கட்சிகள் மெளனமாக உள்ளனர். 
  மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியா சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக முயற்சி நடந்தது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடுமையாக உழைத்து அதை சாத்தியமாக்கியுள்ளது. 
  இணக்க சூழ்நிலை இல்லை: ஆனால் எதிர்க்கட்சிகளோ, இப்போது இந்த விவகாரத்தில் என்ன பெரிய விஷயம் உள்ளது; இது சிறிய வெற்றி என்று கூறுகின்றன. 
  நாட்டில் முன்பெல்லாம் தேசப் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை விவகாரங்களில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் ஒரே குரலில் பேசும் இணக்க சூழ்நிலை இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அந்த நடைமுறை இல்லாமல் போய் விட்டது.  இது துரதிருஷ்டவசமானது என்றார் அருண் ஜேட்லி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai