சுடச்சுட

  

  மசூத் அஸார் விவகாரத்தில் அனைத்து நாடுகளும் கட்டுப்பட வேண்டும்: ஐ.நா.

  By DIN  |   Published on : 03rd May 2019 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  masood


  ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ள முடிவுக்கு அனைத்து நாடுகளும் கட்டுப்படும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அல்-காய்தா தடை ஆலோசனைக் குழுவில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டு வந்தது. இந்நிலையில், தனது நிலைப்பாட்டை சீனா மாற்றிக்கொண்டதையடுத்து, மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக பாதுகாப்பு கவுன்சில் புதன்கிழமை அறிவித்தது. இதன்மூலம், சர்வதேச நாடுகளில் அவருக்குச் சொந்தமாக உள்ள சொத்துகளை முடக்கவும், அவரின் பயணத்துக்குத் தடை விதிக்கவும், அவரின் அமைப்புக்கு ஆயுதங்கள் கிடைக்காமல் தடை செய்யவும் முடியும்.
  இது தொடர்பாக, அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் அல்-காய்தா தடை ஆலோசனைக் குழுவின் விரிவான ஆய்வுக்குப் பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கடும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. இந்த முடிவுக்கு அனைத்து உறுப்பு நாடுகளும் கட்டுப்பட வேண்டும் என்றார்.
  இந்தியா அளித்த உறுதியான ஆதாரங்களே காரணம்
  பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவிக்க இந்தியா அளித்த உறுதியான ஆதாரங்களே முக்கியக் காரணம் என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிபொருள்கள் நிரப்பிய வாகனத்தை பயங்கரவாதி ஒருவர் மோதி வெடிக்கச் செய்தார். கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி நிகழ்ந்த இந்தத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் மசூத் அஸார் தலைமையிலான ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. கடந்த 2016-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப் படை தளத்தின் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையும் மசூத் அஸார்தான் திட்டமிட்டார். 2008-ஆம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலிலும் மசூத் அஸாருக்கு பங்கு உண்டு.
  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா எடுத்த முயற்சிகளுக்கு இதுவரை தடையாக இருந்த சீனா, தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை கைவிட்டது. இதையடுத்து, சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அஸார் அறிவிக்கப்பட்டார்.
  இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது:
  இந்தியாவுக்கு எதிராக மசூத் அஸார் தொடர்ந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார் என்பதற்கு நமது தரப்பில் இருந்து வலுவான ஆதாரங்கள் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில்தான் அவரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்தது. இந்த விஷயத்தில் தனது தோல்வியை மறைப்பதற்காக பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. அரசியல் நெருக்கடி காரணமாக மசூத் அஸார் மீது தடை விதிக்கப்பட்டது என்பதுபோல தோற்றத்தை ஏற்படுத்த அந்நாடு முயற்சிக்கிறது. உண்மையில் பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. மசூத் அஸார் பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டார், நிதியளித்தார், பயங்கரவாதிகளை திட்டமிட்டு உருவாக்கி பயிற்சியளித்தார். பயங்கரவாத செயல்களுக்காக ஆயுதங்களை வாங்கினார் என்பதற்கு உறுதியான ஆதாரங்களை ஐ.நா.வில் இந்தியா அளித்துள்ளது.
  மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்பதற்காக சீனாவுக்கு எந்த வாக்குறுதியையும் இந்தியா அளிக்கவில்லை. தேசப் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் உறுதியானது. அது தொடர்பாக இந்தியா எந்த நாட்டுடனும் எவ்வித பேச்சும் நடத்தவில்லை. மசூத் அஸார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது. அஸார் மீதான ஐ.நா.வின் நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்புத் தெரிவிக்காததன் மூலம், அந்நாட்டுடனான இந்திய உறவு மேம்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai