சுடச்சுட

  

  ராபர்ட் வதேரா மனு: அமலாக்கத் துறைக்கு கூடுதல் அவகாசம்: தில்லி உயர்நீதிமன்றம்

  By DIN  |   Published on : 03rd May 2019 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Delhi-High-Court


  சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தாக்கல் செய்துள்ள மனு குறித்து பதில் தாக்கல் செய்வதற்கு அமலாக்கத் துறைக்கு தில்லி உயர்நீதிமன்றம் கூடுதல் கால அவகாசம் அளித்துள்ளது.
  பிரிட்டன் தலைநகர் லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் வாங்கப்பட்ட விவகாரத்தில் ராபர்ட் வதேரா, அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 
  இந்நிலையில், அமலாக்கத் துறையின் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரியும், அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள சட்டப்பிரிவுகளை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரியும் தில்லி உயர்நீதிமன்றத்தில் ராபர்ட் வதேராவும், அரோராவும் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
  தில்லி உயர்நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த மாதம் 25ஆம் தேதி நடைபெற்றபோது, அமலாக்கத் துறைக்கு பிரமான பத்திரம் தாக்கல் செய்ய 2 வாரகாலம் அவகாசத்தை நீதிபதிகள் அளித்திருந்தனர். எனினும், அமலாக்கத் துறை தனது பிரமானப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை.
  இந்நிலையில், இந்த மனுக்கள் தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹிமா கோலி, வினோத் கோயல் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அமித் மகாஜன் வாதாடுகையில், சிறிய அளவிலான பிரமான பத்திரம் தயாராகி விட்டது, அதை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என்றார். 
  இதைக்கேட்டுவிட்டு நீதிபதிகள் கூறுகையில், அமலாக்கத் துறை தனது பிரமானப் பத்திரத்தை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு, அமலாக்கத் துறையின் பிரமானப் பத்திரத்துக்கான பதிலை ராபர்ட் வதேராவும், அரோராவும் 2 வாரங்கள் கழித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
  இதையடுத்து, மனுக்கள் மீதான அடுத்தகட்ட விசாரணையை ஜூலை மாதம் 18ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai