சமாஜவாதி-பகுஜன்சமாஜ் கூட்டணிக்கு எதிராக செயல்படும் பாஜக, காங்கிரஸ்: மாயாவதி குற்றச்சாட்டு

சமாஜவாதி-பகுஜன்சமாஜ் கூட்டணிக்கு எதிராக பாஜகவும், காங்கிரஸும் இணைந்து செயல்படுகின்றன என்று பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி
சமாஜவாதி-பகுஜன்சமாஜ் கூட்டணிக்கு எதிராக செயல்படும் பாஜக, காங்கிரஸ்: மாயாவதி குற்றச்சாட்டு


சமாஜவாதி-பகுஜன்சமாஜ் கூட்டணிக்கு எதிராக பாஜகவும், காங்கிரஸும் இணைந்து செயல்படுகின்றன என்று பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில்  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை தோற்கடிக்கும் நோக்கில், எதிரெதிர் அணியாக இருந்த அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில், சமாஜவாதி-பகுஜன்சமாஜ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் பாஜக, காங்கிரஸ் செயல்படுவதாக மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
எங்கள் கூட்டணி தோற்க வேண்டும் என நினைத்து பாஜக செயல்படுகிறது. இதே நோக்கத்துடனேயே காங்கிரஸ் கட்சியும் செயல்படுகிறது. எங்கள் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. எங்கள் கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எள்ளி நகையாடி வருகிறது. பாஜக வெற்றி பெற்றாலும் பரவாயில்லை; நாங்கள் தோற்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. எங்களைத் தோற்கடிப்பதற்காக  பாஜகவுடன் இணைந்து காங்கிரஸ் மறைமுகமாக செயல்படுகிறது.
பகுஜன்சமாஜ் கட்சி, அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டுகிறார். பாஜக, அம்பேத்கரின் பெயரை வாக்கு வங்கிக்காக பயன்படுத்துகிறது. ஆனால் எங்கள் கட்சிக்கு அம்பேத்கர் உயிர் போன்றவர். காங்கிரஸும், பாஜகவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. அவர்கள் மக்களுக்காக என்றுமே ஆட்சி செய்ததில்லை.
கடந்த 5 ஆண்டுகளாக பாகிஸ்தான் பிரச்னைக்கு தீர்வு காணாத பாஜக அரசு, இப்போது தேர்தல் நேரத்தில் தீர்வு காண முயல்கிறது. மசூத் அஸாரை சிறையில் இருந்து விடுவித்த பாஜக, இப்போது அவரை பயங்கரவாதியாக அறிவிக்க வைத்து தேர்தல் நாடகமாடுகிறது என்று குற்றம்சாட்டினார் மாயாவதி.
முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, மாயாவதியோ, சமாஜவாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவோ எவ்வித கருத்தும் கூறவில்லை. 
மோடியை நினைத்து எனக்கு எந்த அச்சமும் இல்லை. நான் யார் கட்டுப்பாட்டிலும் செயல்படவில்லை.  ஆனால், மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் மோடியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றனர்  என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com