பானி புயல்: ஒடிஸாவில் 11.5 லட்சம் பேர் வெளியேற்றம்

பானி புயல் முன்னெச்சரிக்கையாக, ஒடிஸாவில் கடற்கரையோரத்தில் வசிக்கும் 11.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கையாக, ஒடிஸா மாநிலம், புரி நகரில் தாழ்வான இடத்தில் இருந்து தற்காலிக முகாமுக்கு தங்களது உடைமைகளை வியாழக்கிழமை வேனில் ஏற்றிக் கொண்டு செல்லும் பொதுமக்கள். 
முன்னெச்சரிக்கையாக, ஒடிஸா மாநிலம், புரி நகரில் தாழ்வான இடத்தில் இருந்து தற்காலிக முகாமுக்கு தங்களது உடைமைகளை வியாழக்கிழமை வேனில் ஏற்றிக் கொண்டு செல்லும் பொதுமக்கள். 


பானி புயல் முன்னெச்சரிக்கையாக, ஒடிஸாவில் கடற்கரையோரத்தில் வசிக்கும் 11.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இயற்கைப் பேரிடர் காரணமாக மக்கள் இத்தனை அதிக எண்ணிக்கையில் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறுவது இதுவே முதல்முறையாக இருக்கும்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல், அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ளது. வியாழக்கிழமை மதிய நிலவரப்படி, பானி புயல், ஒடிஸா மாநிலம், புரி நகரில் இருந்து தெற்கு-தென்மேற்கு திசையில் 320 கி.மீ.தொலைவில் மேற்கு-மத்திய வங்கக் கடலில் மையம் கொண்டிருந்தது. இந்தப் புயல், புரி நகருக்கும், கோபால்பூருக்கும் இடையே வெள்ளிக்கிழமை காலை 8-10 மணியளவில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலை அடுத்து பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: 
ஒடிஸாவின் 13 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 11.5 லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்கள் தங்களது உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். ஏற்கெனவே, 3.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு விட்டனர். அவர்களை வெளியேற்றும்பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
அவசர மீட்புப் பணிகளுக்காக, கடற்படை, கடலோர காவல் படை, விமானப் படை ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேசியப் பேரிடர் மீட்புப் படை, ஒடிஸா பேரிடர் தடுப்பு விரைவுப் படை, தீயணைப்புத் துறை ஆகியவற்றின் வீரர்கள் தாழ்வான பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார் அந்த அதிகாரி.
தயார் நிலையில் மருத்துவர்கள்: மருத்துவ உதவிக்காக, மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளின் விடுமுறை, வரும் 15-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், அனைத்து காவலர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுமுறையில் இருந்த காவலர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
பிரதமர் தலைமையில் ஆய்வு: பானி புயலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புயலை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டறிந்தார்.
ரயில்கள் ரத்து: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 103 ரயில்களை ரத்து செய்துள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. 
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்குத் தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும், விமான நிலைய நிர்வாகத்தினருக்கும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒடிஸாவை கடந்த 1999-ஆம் ஆண்டு புயல் தாக்கியதில் மிகப்பெரிய அளவில் உயிர்ச்சேதமும், பொருள்சேதமும் ஏற்பட்டது. அந்தப் புயலில் சிக்கி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
 பானி புயல் காரணமாக  தமிழகத்தின் சில பகுதிகளில் வியாழக்கிழமை 30 முதல் 40 கி.மீ. வரை காற்றின் வேகம் இருந்தது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:பானி புயல் ஒடிஸாவில் வெள்ளிக்கிழமை கரையைக் கடக்க உள்ளதை அடுத்து, மேற்கு மத்திய வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com