சுடச்சுட

  

  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்கள் தொழில் தொடங்க சலுகை: ராகுல் காந்தி வாக்குறுதி

  By DIN  |   Published on : 04th May 2019 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ragul


  மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இளைஞர்கள் தொழில் தொடங்க சலுகை அளிக்கப்படும். அதன்படி, முதல் மூன்று ஆண்டுகளுக்கு அவர்கள் எவ்வித அனுமதியும் பெற வேண்டிய தேவை இருக்காது என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
  மத்தியப் பிரதேச மாநிலம், ரேவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
  கடந்த மக்களவைத் தேர்தலையொட்டி அளித்த வாக்குறுதிகள் குறித்து இப்போது பிரதமர் மோடி எதுவும் பேசுவதில்லை. 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும், நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்ற வாக்குறுதிகளை மோடி இப்போது மறந்துவிட்டார்.
  ஆனால், நியாய் திட்டத்தின்கீழ் ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.3.60 லட்சம் (5 ஆண்டுகளுக்கான நிதியுதவி) வழங்குவோம் என்று நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம். அந்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம்.
  அதானி, அம்பானி, லலித் மோடி, நீரவ் மோடி போன்ற தொழிலதிபர்களுக்கு மட்டுமே பிரதமர் மோடி காவலாளியாக உள்ளார். பொதுமக்களின் பணத்தை எடுத்து, அவர்களுக்கு அளிக்கிறார்.
  அதேசமயம், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நான் காவலாளியாக இருக்க வேண்டும் என்று இந்த நாடு விரும்புகிறது. காவலாளி என்ற வார்த்தையை நான் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் என்னிடம் கூறுகிறது. ஏனெனில், காவலாளி என்ற வார்த்தையை நான் உச்சரிக்கும்போது, திருடன் என்ற அடுத்த வார்த்தையை மக்கள் கூறிவிடுகின்றனர். அது என்னுடைய தவறா? இப்போது பிரதமரே காவலாளி என்ற வார்த்தையை பயன்படுத்த தயங்குகிறார்.
  2 கோடி வேலைவாய்ப்புகளை வழங்குவதாக கூறி, இளைஞர்களை மோடி ஏமாற்றிவிட்டார். 
  நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டது. ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் 24,000 பேர் வேலையிழந்து வருகின்றனர்.
  மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஓராண்டுக்குள் 22 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும். கிராம பஞ்சாயத்துகளில் 10 லட்சம் பேருக்கு பணி அளிக்கப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வங்கி கடனை திருப்பி செலுத்தாத விவசாயிகள் சிறைக்கு அனுப்பப்பட மாட்டார்கள். தொழில் தொடங்கும் இளைஞர்கள், முதல் மூன்று ஆண்டுகளுக்கு எந்த அனுமதியும் பெற வேண்டிய தேவை இருக்காது.
  பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதாரத்துக்கு, நியாய் திட்டம் புத்துயிரூட்டும். இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதியால், ஏழை மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். இதன் மூலம் இந்திய உற்பத்தி துறை வலுவடையும் என்றார் ராகுல்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai