சுடச்சுட

  

  கிரிக்கெட்டுக்குக்கூட பாதுகாப்பு தர இயலாத காங்கிரஸ்: மோடி தாக்கு

  By DIN  |   Published on : 04th May 2019 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  ராஜஸ்தான் மாநிலம், பிகானீரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் கட்சியினர் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி.


  கிரிக்கெட் போட்டிகளுக்கு கூட முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசால் பாதுகாப்புத் தர இயலவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
  மக்களவைத் தேர்தலையொட்டி, ராஜஸ்தான் மாநிலம், ஹிந்தோன் நகர், சீகர், பிகானீர் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டங்களில் அவர், மேலும் கூறியதாவது:
  பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் காங்கிரஸையும், பாஜகவையும் ஒப்பிட முடியாது. அனைத்து பயங்கரவாதத் தாக்குதல்களையும் தடுத்துவிட முடியாது என்று கூறுவதை காங்கிரஸ் அரசு வழக்கமாகக் கொண்டிருந்தது.
  கடந்த 2008-ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களிலும், மகாராஷ்டிரத்தின் மும்பை நகரிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால், நாட்டின் தற்போதைய நிலைமை எப்படி இருக்கிறது என்பதை மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
  கடந்த 2009-ஆம் ஆண்டிலும், 2014-ஆம் ஆண்டிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதைக் காரணம் காட்டி, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்குப் பாதுகாப்புத் தர முடியாது என்று கூறி அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு அனுமதி மறுத்துவிட்டது. 
  இதன் காரணமாக, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வெளிநாடுகளில் நடத்தப்பட்டன. ஆனால், தற்போது ஒரே நேரத்தில் மக்களவைத் தேர்தலும் நடைபெறுகிறது; ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறுகின்றன. கிரிக்கெட் போட்டிகளுக்குக் கூட பாதுகாப்புத் தர இயலாத அரசாக, முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தது.
  துல்லியத் தாக்குதல் குறித்து பொய் கூறும் காங்கிரஸ்: முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்திலும் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக காங்கிரஸ் பொய் சொல்கிறது.
  கடந்த 2016-ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. முதலில், இப்படி தாக்குதலே நடத்தப்படவில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். ஆனால், மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு ஆதரவாக இருந்தனர்.
  சிறிது காலம் கழித்து, அந்த துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது, எங்கள் ஆட்சியிலும் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.
  நான்கு மாதங்களுக்கு முன் பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர், தங்களது ஆட்சிக் காலத்தில் 3 முறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறியிருந்தார். தற்போது, 6 முறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அக்கட்சியைச் சேர்ந்த மற்றொரு தலைவர் கூறுகிறார். 
  கடந்த 4 மாதங்களில் துல்லியத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதேநிலை நீடித்தால், தேர்தல் முடிந்த பிறகு, தங்கள் ஆட்சிக் காலத்தில் 600 முறை துல்லியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அவர்கள் கூறுவார்கள். ஏனெனில், அவர்கள் கூறுவதெல்லாம் பொய். அவர்களின் தாக்குதல்கள் எல்லாம் காகிதங்களில்தான் உள்ளன.
  இந்திய ராணுவத் தலைமை தளபதி, விமானப் படைத் தலைமை தளபதி ஆகியோரை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சிக்கிறார்கள். நமது வீரர்களின் துணிச்சல் மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை. பயங்கரவாதிகளின் உயிரிழப்பு குறித்து சந்தேகம் எழுப்புகிறார்கள்.
  ஆனால், பிரசாரத்தின்போது இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வர்த்தமானின் பெயரை நான் உச்சரித்தால், உடனே தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டதாகக் கூறி, தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் தலைவர்கள் முறையிடுவார்கள். அக்கட்சியைச் சேர்ந்த மற்றொரு தலைவர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பார். அவர்களின் புகாரை ஆராயுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும். எனது உரையை ஆராயும் தேர்தல் ஆணையம், நான் நெறிமுறைகளை மீறவில்லை என்று சான்றளிக்கும். 
  பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் எனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள். இதையே காங்கிரஸ் தலைவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
  சாத்தியமில்லாதது சாத்தியமானது: பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார், சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் இரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு, காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. 
  நாடு பாதுகாப்பான சூழலில் இருப்பதை காங்கிரஸ் தலைவர்கள் விரும்பவில்லை. இந்த நேரத்தில் சாத்தியமில்லாதது சாத்தியமானது என்ற பாஜகவின் முழக்கத்தை காங்கிரஸ் தலைவர்கள் உற்றுநோக்க வேண்டும். விரைவான வளர்ச்சிக்கும், நாட்டை சரியான பாதையில் வழிநடத்தவும் மத்தியில் வலிமையான அரசு அமைய வேண்டியது அவசியம் என்றார் பிரதமர் மோடி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai