சுடச்சுட

  

  நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி சந்திரயான்-2 ஆய்வு மேற்கொள்ளும்: இஸ்ரோ தலைவர் சிவன்

  By DIN  |   Published on : 04th May 2019 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sivan-isro


  இஸ்ரோ மூலம் விண்வெளிக்கு வரும் ஜூலை 9 முதல் 16-ஆம் தேதிக்குள் செலுத்தப்படவுள்ள  சந்திரயான்-2 விண்கலம்  நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி  ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
  நாகர்கோவிலை அடுத்த சரக்கல்விளை பகுதியில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: பானி புயலின் நகர்வை துல்லியமாக முன்னரே கணிப்பதற்கு செயற்கைக்கோள் படங்கள் பேருதவியாக அமைந்தன. புயல் நகர்வை முன்னதாகவே கண்டறிந்ததால், பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பாதுகாக்க முடிந்தது. 
  ஜூலை 9 முதல் 16 -ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படவுள்ள சந்திரயான்- 2 விண்கலம் செப்டம்பர் 6-இல்  நிலவில் இறங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. விண்கலம் நிலவில் தரையிறங்கியதும், அங்கு தண்ணீர் உள்ளதா, நிலவின் தரைப் பகுதியின் தன்மை போன்றவை குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும். இதன்மூலம் புதிய தகவல்களை அறிய முடியும். இதுவரை நிலவுக்குச் சென்ற விண்கலங்கள் பூமத்திய ரேகை பகுதியில்தான் இறங்கியுள்ளன. ஆனால், சந்திரயான்- 2 இதுவரை யாரும் இறங்காத இடமான தென்துருவத்தில் இறங்கும். இதன்மூலம் புதிய கண்டுபிடிப்புகளை அறிய வாய்ப்புள்ளது. இந்நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
  அடுத்த ஆண்டில்  சூரியனை ஆராயும் வகையில், ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் விண்ணில் ஏவப்படும். இதன்மூலம், சூரியனைப்பற்றி இதுவரை அறியாத பல தகவல்களைக் கண்டறியலாம்.
  மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை வெற்றி பெற வைக்கும் முயற்சியில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. 2022 -ஆம் ஆண்டுக்குள் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதுபோன்று பல திட்டங்களை  செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு  வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களுக்கு யுவிகா என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாணவர்களின் அறிவியல் எண்ணங்கள் மற்றும் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இத்திட்டத்தை இஸ்ரோஅறிமுகம் செய்துள்ளது.  மே 13 -இல் இப்பயிற்சி தொடங்குகிறது. மாநிலத்துக்கு 3 மாணவர்கள் வீதம் நாடு முழுவதும் தேர்வான 108 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai