சுடச்சுட

  

  பர்ஹான் வானியின் கூட்டாளி உள்பட 3 ஹிஸ்புல் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை

  By DIN  |   Published on : 04th May 2019 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  army

  ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்த களிப்பில் பாதுகாப்புப் படை வீரர்கள்.


  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர், கடந்த 2016-இல் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட ஹிஸ்புல் பயங்கரவாதி பர்ஹான் வானியின் கூட்டாளி ஆவார்.
  இதுதொடர்பாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
  ஷோபியான் மாவட்டத்தின் இமாம் சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், சம்பவ இடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
  கொல்லப்பட்ட மூவரும், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களில் ஒருவர், கடந்த 2016-ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட பயங்கரவாதி பர்ஹான் வானியின் கூட்டாளியான லத்தீஃப் தார் ஆவார். இவர், தெற்கு காஷ்மீரில் பஞ்சாயத்து தலைவர்கள் பலரது கொலையில் தொடர்புடையவர்.
  இதனிடையே, சம்பவ இடத்தில் திரண்ட போராட்டக்காரர்கள், பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்களை கலைப்பதற்காக, ராணுவத்தினர் பெல்லட் ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் போராட்டக்காரர்கள் இருவர் காயமடைந்தனர் என்றார் அந்த அதிகாரி.
  ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி பர்ஹான் வானி, கடந்த 2016, ஜூலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார். 
  இதைத்தொடர்ந்து, காஷ்மீரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai