சுடச்சுட

    

    பாஜகவால் முட்டுக்கட்டை போடப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை துரிதப்படுத்துவேன்: அமேதி வாக்காளர்களுக்கு ராகுல் கடிதம்

    By DIN  |   Published on : 04th May 2019 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ragul


    உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் பாஜகவால் முட்டுக்கட்டை போடப்பட்ட வளர்ச்சித் திட்டங்களைத் துரிதப்படுத்துவேன் என்று காங்கிரஸ் தலைவரும், அத்தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தார்.
    அமேதி மக்களுக்கு ஹிந்தியில் அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
    பாஜக பொய் வாக்குறுதிகளை அளித்து வருகிறது. வாக்குகளை பெறுவதற்காக வாக்காளர்களுக்கு பணத்தையும் அளித்து வருகிறது.
    அமேதி வாக்காளர்கள் இந்த வலையில் சிக்கிவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன். அமேதி எனது குடும்பம். நலிவடைந்த பிரிவினர் மற்றும் ஏழைகளின் பிரச்னை கேட்டறிய எனக்கு வலிமை கொடுத்தது இந்தக் குடும்பத்தினர்தான். 
    நீங்கள் எனக்கு அளித்த அன்பைக் கொண்டுதான் ஒட்டுமொத்த நாட்டையும் இணைக்க முயற்சி செய்தேன். அமேதி தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பாஜக அரசு முட்டுக்கட்டை போட்டது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு பதவியேற்றதும், அந்தத் தடைகளை நீக்கி வளர்ச்சி திட்டங்களை வேகப்படுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன். எனவே, என்னை மீண்டும் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
    விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், சிறிய வியாபாரிகள் ஆகியோருக்காக அரசு உழைக்க வேண்டும் என்று அமேதியிலிருந்து குரல் எழுகிறது. ஆனால், பாஜகவோ 15 முதல் 20 தொழிலதிபர்கள் கையில் மத்திய அரசு இருக்க வேண்டும் என்று கருதுகிறது. ஒட்டுமொத்த தேசமும், உண்மையின் பக்கம் நிற்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு நிகழ்த்திய அநீதிக்காக அந்தக் கட்சிக்கு எதிராக மக்கள் ஒன்று சேர்ந்துள்ளனர் என்று அந்தக் கடிதத்தில் ராகுல் குறிப்பிட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் 3 முறை எம்.பி.யாக உள்ள ராகுலுக்கு எதிராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அமேதி மக்களுக்காக ராகுல் ஒன்றுமே செய்யவில்லை என்று பிரசாரத்தில் குற்றம்சாட்டினார்.
    உத்தரப் பிரதேச காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அன்ஷு அவாஸ்தி கூறுகையில், ராகுல் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அமேதியில் வீடுதோறும் சென்று அவர் வெளியிட்ட செய்தியை கட்சியினர் தெரியப்படுத்துவார்கள் என்றார்.
    கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இரானியை, ராகுல் காந்தி 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai