ராகுலின் கையிலிருந்து  நழுவுகிறதா அமேதி?

மக்களவைக்கான நான்குகட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் வரும் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
ராகுலின் கையிலிருந்து  நழுவுகிறதா அமேதி?


மக்களவைக்கான நான்குகட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் வரும் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ள அமேதி தொகுதி, ராகுலின் கையிலிருந்து நழுவுகிறதா என்ற கேள்வியும் மக்கள் சிலரின் மனதில் எழாமல் இல்லை.
ஒருவரின் குடும்பப்பெயரால் என்ன ஆகிவிடப் போகிறது என்று பலர் சிந்திக்கலாம். ஆனால், உத்தரப் பிரதேச மாநிலத்தின் ரேபரேலி, அமேதி, சுல்தான்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் வாக்குகளைப் பெறுவதற்கு, குடும்பப் பெயர் மட்டுமே பல ஆண்டுகளுக்குக் காரணமாக இருந்துள்ளது. 
ரேபரேலியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும், அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சுல்தான்பூரில் பாஜக மூத்த தலைவர் மேனகா காந்தியும் போட்டியிடுகின்றனர்.
சுதந்திரத்துக்குப் பிறகு , ரேபரேலியும், சுல்தான்பூரும் காங்கிரஸின் கோட்டைகளாக வெகுநாள்களுக்கு விளங்கிவந்தன. இவ்விரு தொகுதிகளில் இருந்து ஒரு பகுதி பிரிக்கப்பட்டு, அமேதி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு, அங்கும் காங்கிரஸ் கோலோச்சத் தொடங்கியது. 
இருந்தபோதிலும், தற்போது காந்தி என்ற குடும்பப் பெயரின் அடையாளம் சிறிது சிறிதாக அழிந்துவருகிறது. 
சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், சோனியா காந்தி தேசத் தலைவர்களில் ஒருவர். ரேபரேலி என்ற ஊரின் பெயரே காந்தி குடும்பத்தினரின் காரணமாகத் தான் வெளிஉலகுக்குத் தெரியவந்தது. 
எனவே, சோனியா காந்தி இங்கு வெற்றி பெற வேண்டும் என்றார். சோனியா காந்தி கடந்த 15 ஆண்டுகளாக அத்தொகுதியில் மேற்கொண்டு வரும் பணிகளைப் பல நபர்களும் பாராட்டி வருகின்றனர். 
ராகுல் மீது அதிருப்தி: அதே வேளையில், அமேதி தொகுதி மக்கள் பலர், அத்தொகுதி எம்.பி. ராகுல் காந்தி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். அமேதி தொகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்துதரப் படவில்லை என்கின்றனர் சிலர். அமேதி தொகுதி மக்களை ராகுல் காந்தி சந்திப்பதே இல்லை என்றும் பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அமேதி தொகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் இத்தேர்தலில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானிக்கே வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்து வருகின்றனர். ஸ்மிருதி இரானியும் ராகுல் காந்திக்கு எதிராகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அமேதி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், இந்தத் தொகுதியைப் பாருங்கள். காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரது தொகுதி போலவா இது காட்சியளிக்கிறது? ஒரு விஐபி நபரின் தொகுதி போலவே இது இல்லை. சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் சைஃபயீ தொகுதியைப் பாருங்கள். 
ஏதோ வெளிநாட்டில் இருப்பதுபோல் காட்சியளிக்கிறது. ஆனால், அமேதியில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவே இல்லை என்றார்.
சுல்தான்பூரில் போட்டியிடும் மேனகா காந்தி பாஜகவைச் சேர்ந்தவர் என்றாலும், சஞ்சய் காந்தியின் மனைவி என்ற முறையிலும், அப்பகுதியில் சஞ்சய் காந்தி மேற்கொண்ட நற்பணிகளைக் கூறியும் வாக்குகளைச் சேகரித்து வருகிறார்.
தற்போதைய இளைஞர்கள் காந்தி என்ற குடும்பப் பெயரைப் பார்த்து மட்டும் வாக்களிக்கத் தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. குடும்பப் பெயரைத் தாண்டிய வளர்ச்சிப் பணிகள்தான் மக்களின் வாக்குகளைப் பெற்றுத்தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com