வாராணசியில் வேட்புமனுக்கள் நிராகரிப்பு : தமிழ்நாடு, தெலங்கானா விவசாயிகள் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு

வாராணசி மக்களவைத் தொகுதியில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு, தெலங்கானா விவசாயிகள் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். 
தில்லியில் வெள்ளிக்கிழமை தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துவிட்டு வரும் தமிழக, தெலங்கானா விவசாயிகள்.
தில்லியில் வெள்ளிக்கிழமை தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துவிட்டு வரும் தமிழக, தெலங்கானா விவசாயிகள்.


வாராணசி மக்களவைத் தொகுதியில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு, தெலங்கானா விவசாயிகள் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். 
இதுகுறித்து மஞ்சள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் அகில இந்திய தலைவர் பி.ஆர்.தெய்வசிகாமணி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விளை பொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்கவில்லை. இரட்டிப்பு கொள்முதல் விலை கிடைக்கும் என்ற வாக்குறுதியை இந்த அரசு நிறைவேற்றவில்லை. 
இரட்டிப்பு கொள்முதல் விலைக்குப் பதிலாக, விவசாயிகளின் கடன்தான் இரட்டிப்பானது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியில் போட்டியிட முடிவு செய்தோம். 
இதற்காக தெலங்கானாவிலிருந்து 60 பேரும், தமிழகத்திலிருந்து 40 பேரும் வாராணசி சென்றோம். வேட்புமனு தாக்கல் செய்ய முயன்ற எங்களை மனிதர்களாக நடத்தவில்லை. காவல்துறையினரை வைத்து விரட்டினர். தேர்தல் விதிகளுக்கு மாறாக வெளியேற்றினர். 
ரூ.25 ஆயிரம் டெபாசிட் செலுத்துவதற்கான படிவம் கொடுக்காமல் இரண்டரை மணி நேரம் அலைக்கழித்தனர். இதனால், சரியாக மனுத் தாக்கல் செய்ய முடியவில்லை. சரியாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்துவிட்டனர். ஆகவே, வாராணசியில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அளித்துள்ளோம். 
எங்களது கடிதத்தை தேர்தல் ஆணைய வரவேற்பறையில் இருந்த அதிகாரிகள் வாங்கிக் கொண்டனர். தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து முறையிட திங்கள்கிழமை (மே 6) காலை 11 மணிக்கு நேரம் அளித்துள்ளனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com