ஹரியாணா: நீதிபதி பணிக்கான தேர்வில் 9 பேர் மட்டுமே தேர்ச்சி: ஆய்வுக் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்

ஹரியாணாவில் 1,282 பேர் பங்கேற்ற நீதிபதி பணிக்கான முதன்மைத் தேர்வில், 9 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணா: நீதிபதி பணிக்கான தேர்வில் 9 பேர் மட்டுமே தேர்ச்சி: ஆய்வுக் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்


ஹரியாணாவில் 1,282 பேர் பங்கேற்ற நீதிபதி பணிக்கான முதன்மைத் தேர்வில், 9 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
ஹரியாணாவில் சிவில் நீதிபதி (ஜூனியர்) பதவிக்குக் காலியாக உள்ள 107 இடங்களுக்காகக் கடந்த டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இதை 14,301 மாணவர்கள் எழுதினர். இதில் தேர்ச்சி பெற்ற 1,282 நபர்களுக்குக் கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகள் ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் 9 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, முதன்மைத் தேர்வின் மதிப்பீட்டு முறை குறித்தும், திருத்தப்பட்ட விடைத்தாள்களைக் கோரியும், மாதிரி விடைத்தாள்களைக் கோரியும் மாணவர்கள் பலர் சார்பில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இதற்கு எந்தப் பதிலையும் அளிக்காத பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றம், முதன்மைத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 9 நபர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ள தேதியை அறிவித்தது.
இந்நிலையில், இந்த முதன்மைத் தேர்வை ரத்து செய்யக் கோரி 92 மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், முதன்மைத் தேர்வுக்கான விடைத்தாள்கள் தன்னிச்சையான, ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. 
இந்தப் பதவிக்குத் தகுதியில்லாத நபர்கள் முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த முடிவுகளை ரத்து செய்யாவிட்டால், மனுதாரர்களுக்கும், தோல்வியடைந்த மாணவர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், முதன்மைத் தேர்வுக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்ட முறை ஏற்றுக்கொள்ளத் தகுந்ததா, இல்லையா என்பது தொடர்பாக ஆய்வு நடத்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான தனிநபர் குழுவை நியமிக்கிறோம். 
இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்தி, உச்சநீதிமன்றத்தில் அவர் அறிக்கை தாக்கல் செய்வார். அதன்பிறகு, இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com