சுடச்சுட

  
  PURI

  ஒடிஸா மாநிலத்தில் பானி புயலால் 10,000 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மின்சாரம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட சேவைகள் முழுவதும் முடங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
   வங்கக் கடலில் உருவான பானி புயல் மிகவும் தீவிரமடைந்து, ஒடிஸாவின் புரி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை கரையைக் கடந்தது. அப்போது புரியில் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியதுடன், இடி-மின்னலுடன் பலத்த மழையும் கொட்டித் தீர்த்தது. இதேபோல், புவனேசுவரம் உள்ளிட்ட இடங்களிலும் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் சுழன்றடித்தது.
   புயல் காற்றில், வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு சின்னாபின்னாமாகின. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களும் புயல் காற்றுக்கு தப்பவில்லை. ஏராளமான வாகனங்கள் புயலின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் தலைகுப்புற கவிழ்ந்தன. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள், செல்லிடப்பேசி கோபுரங்கள் சாய்ந்து விழுந்தன.
   புயலால், புரி மற்றும் குர்தா மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், கட்டாக், பத்ராக், கேந்திரபாரா, ஜகத்சிங்பூர், பாலாசோர், மயூர்பாஞ்ச், கியோன்ஜார், தேன்கனல், நயாகர் ஆகிய பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
   புரியிலும், குர்தாவின் சில பகுதிகள், கஞ்சம், ஜெகத்சிங்பூர், கேந்திரபாரா, பாலாசோர் ஆகிய இடங்களிலும் மின்சார கட்டமைப்பு முழுவதும் நாசமாகிவிட்டது. புவனேசுவரத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. மின்கட்டமைப்பை சரி செய்யும் பணி துரிதமாக நடைபெறுகிறது. சாலைகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து கிடக்கின்றன. இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய பிரிவும் மீட்புப் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. மீட்புப் பணியில் டோர்னியர் விமானம், 2 கப்பல்கள் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
   மேலும் 8 பேர் பலி: பானி புயலுக்கு வெள்ளிக்கிழமை மட்டும் 8 பேர் பலியாகியிருந்தனர். இந்நிலையில், மயூர்பாஞ்ச், புரி, புவனேசுவரம் உள்ளிட்ட இடங்களில் மேலும் 8 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் தகவல் தொடர்பு வசதி பாதிக்கப்பட்டிருப்பதால் அங்குள்ள நிலவரம் தெரியவில்லை. அங்கிருந்து தகவல் வந்தபிறகே, முழு சேத விவரமும் தெரிய வரும். வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டிருந்த விமானம் மற்றும் ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் சீர்செய்யப்பட்டன.
   43 ஆண்டுகளில் முதல் கடுமையான புயல்: புவனேசுவரத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் நவீன் பட்நாயக் கூறியதாவது:
   கடந்த 43 ஆண்டுகளில் ஒடிஸாவை தாக்கிய முதல் கடுமையான புயல் இது. அதேபோல், 150 ஆண்டுகளில் இது 3ஆவது கடுமையான புயலாகும். பானி புயல் கரையை கடப்பது குறித்த தகவல் கிடைத்ததும், ஒடிஸா அரசு துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்துக்குள் 10,000 கிராமங்கள், 52 நகர்ப்புற பகுதிகளில் வசித்த 12 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியது. தேசிய பேரிடரின்போது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இதுவாகும்.
   12 லட்சம் பேரும், 4,000 தற்காலிக முகாம்கள், 880 புயல்கால சிறப்பு மையங்கள் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இலவச உணவு அளிக்கப்பட்டு வருகிறது என்றார் பட்நாயக்.
   பானி புயலின் தாக்கம் குறித்து முதல்வர் நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி விவரம் கேட்டறிந்தார். அப்போது அவரிடம், ஒடிஸாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு தொடர்ந்து அளிக்கும் என்று உறுதியளித்தார். இதேபோல், புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட ஒடிஸாவுக்கு ஞாயிறு அல்லது திங்கள்கிழமை மோடி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
   வங்கதேசத்தில் 14 பேர் உயிரிழப்பு
   வங்கதேசத்தில் பானி புயலை கருத்தில் கொண்டு, 36 கிராமங்களைச் சேர்ந்த 16 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். எனினும், இந்த புயலில் நவகாளி, போலா உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை புயலில் 14 பேர் பலியாகியிருப்பதாகவும், 63 பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai