உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த இயலாது: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த இயலாது: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மக்களவைத் தேர்தல் பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளதால், தற்போதைய நிலையில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த இயலாது என

மக்களவைத் தேர்தல் பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளதால், தற்போதைய நிலையில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த இயலாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 18 பக்கங்கள் கொண்ட பிரமாணப் பத்திரம் ஒன்றை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
 தமிழக அரசின் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மகளிர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு வார்டுகளில் தனி ஒதுக்கீடு அளிக்கும் வகையில், வார்டு மறுவரை ஆணையம் அதன் பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்தப் பரிந்துரைகளை அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான அறிவிக்கை, அரசாணை விரைவில் வெளியிடப்படும்.
 உள்ளாட்சிகளில் நிலவும் அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட முடியாத சூழல் நிலவுவதாக மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்குப் பதிலாக சிறப்பு அலுவலர்களாக, வட்டார வளர்ச்சி அலுவலர்களை நியமித்து அடிப்படை பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு வருகிறோம். உள்ளாட்சிகளுக்கு உரிய நேரத்தில் நிதி ஒதுக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 தமிழகத்தில் மாவட்ட நிர்வாகங்கள் தற்போது மக்களவைத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. தற்போதைய வாக்காளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடமிருந்து பெற்று, அதை தேசிய தகவல் மையத்துக்கு அளிப்பதில் நேரம் பிடிக்கிறது. இவைதான் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தாமதமாவதற்குக் காரணங்களாகும். இதுபோன்ற சூழலில், தமிழகத்தில் மே 31-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத நிலை உள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தெரிவித்ததைப் போல, மூன்று மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 முன்னதாக, வழக்குரைஞர் சி.ஆர். ஜெய சுகின் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
 அதில், "தமிழகத்தில் உள்ளாட்சிப் பொறுப்புகள் 2016, அக்டோபர் 24 முதல் காலியாக உள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஆண்டுதோறும் ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. உள்ளாட்சிப் பொறுப்புகள் காலியாக இருப்பதால், மத்திய அரசு ஆண்டுதோறும் அளிக்கும் ரூ.4 ஆயிரம் கோடி செலவிடப்படாமல் வீணாகிறது. மேலும், உள்ளாட்சிகளில் நிலவும் அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாத சூழலும் நிலவுகிறது. இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகம், வளர்ச்சிப் பணிகள், உள்ளாட்சி ஜனநாயகப்பூர்வ செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
 எனவே, 10 நாள்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.
 இந்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 26-இல் விசாரித்தது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக தலைமைச் செயலருக்கும் நோட்டீஸ் அனுப்பி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்தது.
 இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மேற்கண்டவாறு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
 மு.க.ஸ்டாலின்
 மாநில தேர்தல் ஆணையருக்கு, தேர்தலை நடத்துவதற்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டிய அரசு, கால அவகாசம் கேட்டுக்கொண்டே இருப்பது தோல்வி பயத்தின் உச்சகட்டம். உள்நோக்கத்துடன் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போடப்படுகிறது. அடிப்படை பிரச்னைகளை தீர்க்க உள்ளாட்சி நிர்வாகம் மிக முக்கியமானது.
 கே.பாலகிருஷ்ணன்
 உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் சொத்து வரி, குப்பை வரி, குடிநீர் வரி என அனைத்து வரிகளையும் பல மடங்கு உயர்த்தியிருப்பது, மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது. எனவே, உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com