
"எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாளுக்கொருவர் பிரதமராக இருப்பார்' என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கிண்டலாகத் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தின் கோவிந்த்கர் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:
எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவர் யார் என்று நான் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகிறேன். ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைத்தால், திங்கள்கிழமை மாயாவதி பிரதமராக இருப்பார். செவ்வாய்க்கிழமை அகிலேஷும், புதன்கிழமை சரத் பவாரும், வியாழக்கிழமை தேவெ கௌடாவும், வெள்ளிக்கிழமை சந்திரபாபு நாயுடுவும், சனிக்கிழமை மம்தாவும் பிரதமராக இருப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை பிரதமர் பதவிக்கு விடுமுறை கொடுத்துவிடுவார்கள்.
நமது நாட்டில் இதுபோன்ற ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புகிறீர்களா? நமது நாட்டுக்கு வலுவான தலைவரும், மத்தியில் வலுவான ஆட்சியும் அவசியம். முந்தைய காங்கிரஸ் அரசு, ஏழை மக்களின் நலனுக்காக எதுவும் செய்யவில்லை. பயங்கரவாதத்தை ஒடுக்கவோ, பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி தரவோ காங்கிரஸால் முடியாது. பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே பாகிஸ்தானுக்கு உரிய பதிலடியை தர முடியும் என்றார் அமித் ஷா.
மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என்ற தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லாவின் கருத்தைக் குறிப்பிட்டு பேசிய அமித் ஷா, காங்கிரஸ் கட்சியும் அதையே விரும்புவதாகக் கூறினார்.
"இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிவதற்கு, பாஜக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா கூறியிருக்கிறார். நமது வீரர்கள் 40 பேரைக் கொன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா அல்லது அவர்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்த வேண்டுமா? பாகிஸ்தானிலிருந்து வரும் ஒவ்வொரு தோட்டாவுக்கும் வெடிகுண்டு மூலம் பிரதமர் மோடி அரசு பதிலடி கொடுத்து வருகிறது.
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழி தீர்க்கப்பட்டபோது, பாகிஸ்தான் மட்டுமன்றி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் ஆகியோரின் இல்லங்களும் சோகமயமாகின.
எனவே, நாட்டின் பாதுகாப்பைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டுமெனில், மீண்டும் மோடி பிரதமராக வேண்டும். இதனை மனதில் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் அமித் ஷா.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...