சுடச்சுட

  

  கச்சா எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருப்பது 85%-ஆக அதிகரிப்பு

  By DIN  |   Published on : 06th May 2019 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நமது நாடு எரிபொருள் தேவையை நிறைவு செய்ய வெளிநாடுகளின் கச்சா எண்ணெயை நம்பியிருப்பது 85 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.
   கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற "உர்ஜா சங்கம்' மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கச்சா எண்ணெயை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் அளவை 10 சதவீதம் அளவுக்கு குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, 2013-14 நிதியாண்டில் நாட்டின் எரிபொருள் தேவையை ஈடு செய்ய வெளிநாடுளின் கச்சா எண்ணெயை நம்பியிருப்பது 77 சதவீதமாக காணப்பட்ட நிலையில் அதனை 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் 2022-ஆம் ஆண்டில் 67 சதவீதமாக குறைக்கப்படும் என உறுதியளித்தார். இது, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் பாதியாக குறைக்கப்படும் என்றும் கூறினார்.
   ஆனால் தற்போது, அவர் கூறியதற்கு மாறாக கச்சா எண்ணெய் தேவைக்கு வெளிநாடுகளை சார்ந்திருப்பது 85 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.
   இதற்கு, உள்நாட்டில் கச்சா எண்ணெய் நுகர்வு அதிகரித்து வருவதும், உள்நாட்டு உற்பத்தி தேக்க நிலையில் இருப்பதுமே முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.
   இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 2017-18-இல் 82.9 சதவீதமாக காணப்பட்ட நிலையில், 2018-19 இல் இது 83.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2015-16-இல் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வெளிநாடுகளை சார்ந்திருப்பது 80.6 சதவீதமாக இருந்தது. அடுத்தடுத்த ஆண்டில் இது 81.7 சதவீதமாக உயர்ந்தது.
   இந்தியாவின் கச்சா எண்ணெய் நுகர்வு 2015-16 நிதியாண்டில் 18.47 கோடி டன்னாக இருந்தது. இது, அடுத்த ஆண்டில் 19.46 கோடி டன்னாகவும், அதன் பிறகு 20.62 கோடி டன்னாகவும் ஆனது. இந்த நிலையில், 2018-19-ஆம் நிதியாண்டில் கச்சா எண்ணெய்க்கான தேவை 2.6 சதவீதம் அதிகரித்து 21.16 கோடி டன்னாக இருந்தது.
   கச்சா எண்ணெயின் பயன்பாடு அதிகரித்து வரும் அதேவேளையில் உள்நாட்டில் அதன் உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சியை கண்டது. 2015-16-இல் 3.69 கோடி டன்னாக இருந்த உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியின் அளவு 2016-17-இல் 3.60 கோடி டன்னாக குறைந்தது. இந்த சரிவு நிலை அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நீடித்து 2017-18-இல் 3.57 கோடி டன்னாக குறைந்தது. நடப்பு 2019 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் இது மேலும் சரிந்து 3.42 கோடி டன் என்ற அளவில் மட்டுமே இருந்ததாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai