மோடியின் தேசியவாதம் போலியானது: வணிகர்களுக்கு கேஜரிவால் விளக்கம்

பிரதமர் மோடியின் தேசியவாதம் போலியானது, மீண்டும் அவரது வலையில் விழுந்துவிட வேண்டாம் என்று வணிகர்களுக்கு அரவிந்த் கேஜரிவால் எச்சரிக்கை விடுத்தார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


பிரதமர் மோடியின் தேசியவாதம் போலியானது, மீண்டும் அவரது வலையில் விழுந்துவிட வேண்டாம் என்று வணிகர்களுக்கு அரவிந்த் கேஜரிவால் எச்சரிக்கை விடுத்தார். 

தில்லியில் அரவிந்த் கேஜரிவால் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

"நாங்கள் வணிகர்களிடம் பேசியபோது, மோடி அரசு தங்களை சீரழித்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால், ஒரு சிலர் குழப்பத்தில் இருந்தனர். தேசியவாதம் காரணமாக ஒரு சிலர் மீண்டும் மோடி அரசே தொடர விரும்பினர். ஆனால், மோடியின் தேசியவாதம் போலியானது என்பதை நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அது ஒரு ஏமாற்று செயல். 

நீங்கள் (வணிகர்கள்) படித்தவர்கள் மற்றும் பொறுப்பானவர்கள். இதுபோன்ற மாயவலையில் விழுந்துவிட வேண்டாம். வெளியே வந்து நிதர்சனத்தை பாருங்கள். 

வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை நாட்டில் உள்ள அனைத்து வணிகர்களுக்கும் நோட்டீஸ் அனுப்புகிறது. ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவையனைத்தும் பணத்தை பிடுங்குவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை.  

நாட்டில் வரி பயங்கரவாதம் உள்ளது. அது இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதார அமைப்பை சீரழித்துவிட்டது. ஊழல் செய்பவர்களை தண்டியுங்கள். ஆனால், அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி, அனைத்து வணிகர்களுமே ஊழல்வாதிகள் என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டாம். 99 சதவீத மக்கள் நேர்மையாக பணிபுரியவே விரும்புகின்றனர். ஆனால், இங்குள்ள அமைப்பு அவர்களுக்கு உதவவில்லை. இந்த அமைப்பில் முன்னேற்றங்களை கொண்டு வர வேண்டும்.

மத்திய அரசில் எங்களை வலிமையாக்குங்கள். நாங்கள் தில்லி வணிகர்களுக்கு உதவுவோம். இதுவரை மோடியை ஆதரித்தீர்கள். என்ன கிடைத்தது? தற்போது கேஜரிவாலுடன் உறவை மேம்படுத்துங்கள். கடைசி மூச்சு வரை இந்த உறவுக்கு மரியாதை அளிப்பேன்.

பாகிஸ்தானுடன் மோடிக்கு ரகசியமான ஆளமான உறவு உள்ளது. அதுகுறித்து கேள்வி எழுப்பினால், முதல்வர் மீது தாக்குதல் நடத்த வைக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மீது தாக்குதல் நடத்த வைக்கும் ஒரு பிரதமர் எப்படி தேசியவாதியாக இருப்பார்?" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com