காஷ்மீரில் அரசியல் கட்சியினர் கொலை: விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்ட பாஜக துணைத் தலைவர் குல் முகம்மது மீர், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அந்த மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் அரசியல் கட்சியினர் கொலை: விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்ட பாஜக துணைத் தலைவர் குல் முகம்மது மீர், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அந்த மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 மேலும், மாநிலத்தில் கடந்த சில மாதங்களில் பல்வேறு அரசியல் கட்சியினர் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்துமாறு, தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
 இதுதொடர்பாக அவரது செய்தித் தொடர்பு அதிகாரி கூறியதாவது:
 பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட குல் முகம்மது மீரின் குடும்பத்தினருக்கு, ஆளுநர் சத்யபால் மாலிக் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 மாநிலத்தில் கடந்த சில மாதங்களில் பல்வேறு அரசியல் கட்சியினர் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தவும், அரசியல் பிரமுகர்களுக்கான பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதை கண்டறியவும், தலைமைச் செயலாளர் பி.வி.ஆர்.சுப்ரமணியத்துக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
 இக்கொலைகளில் தொடர்புடையவர்கள் விரைந்து கைது செய்யப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, தனது ஆலோசகர் கே.விஜயகுமாருக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்டோருக்கான பாதுகாப்பு தொடர்பாக உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவும் ஆளுநர் முடிவு செய்துள்ளார் என்றார் அந்த அதிகாரி.
 அனந்த்நாக் மாவட்ட பாஜக துணைத் தலைவர் குல் முகம்மது மீர், நௌகாம் வெர்னிக் பகுதியில் 3 பயங்கரவாதிகளால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். கிஷ்த்வார் பகுதியில் கடந்த மாதம் 9-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகி சந்தர்காந்த் சர்மாவும் அவரது பாதுகாவலரும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். குல்காம் மாவட்டத்தில் கடந்த 4-ஆம் தேதி, பஞ்சாயத்துத் தலைவர் அப்துல் மஜீத் தாரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
 கடந்த மார்ச் 14-ஆம் தேதி தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த இஸ்மாயில் வானி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். எனினும், அவர் காயங்களுடன் உயிர்தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 பிரதமர் மோடி, அமித் ஷா கண்டனம்: அனந்த்நாக் மாவட்ட பாஜக துணைத் தலைவர் குல் முகம்மது மீர் கொலை சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 இதுதொடர்பாக சுட்டுரையில் மோடி வெளியிட்ட பதிவில், "ஜம்மு-காஷ்மீரில் பாஜகவை வலுப்படுத்துவதில், குல் முகம்மது மீரின் பங்களிப்பு எப்போதும் நினைவு கூரப்படும். நமது நாட்டில் வன்முறைக்கு இடம் கிடையாது' என்று தெரிவித்துள்ளார்.
 வன்முறையால் பாஜக தொண்டர்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிடலாம் என்ற பயங்கரவாதிகளின் கனவு பலிக்காது என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com