"பானி' புயல்: ஒடிஸாவில் பலி 34-ஆக அதிகரிப்பு: நிவாரண உதவிகள் அறிவிப்பு

ஒடிஸாவில் பானி புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளது.
"பானி' புயல்: ஒடிஸாவில் பலி 34-ஆக அதிகரிப்பு: நிவாரண உதவிகள் அறிவிப்பு

ஒடிஸாவில் பானி புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான பல்வேறு நிவாரண உதவிகளை, முதல்வர் நவீன் பட்நாயக் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
 ஒடிஸாவில் கடந்த வெள்ளிக்கிழமை கரையைக் கடந்த பானி புயல், புரி, குர்தா ஆகிய மாவட்டங்களை புரட்டிப் போட்டது. புரி மாவட்டமும், குர்தா மாவட்டத்தின் ஒரு சில இடங்களும், மிக கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு, உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வரும் அனைத்து குடும்பங்களுக்கும் 50 கிலோ அரிசி, ரூ.2,000 ரொக்கப் பணம், பாலித்தீன் ஷீட்கள் ஆகியவை வழங்கப்படும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
 இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
 குர்தா மாவட்டத்தின் இதர பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் அரிசியுடன், ரூ.1,000 ரொக்கப் பணமும், பாலித்தீன் ஷீட்களும் வழங்கப்படும். கட்டாக், கேந்திரபாரா, ஜகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்களில் வழக்கமாக வழங்கப்படும் அரிசியுடன், ரூ.500 ரொக்கப்பணம் அளிக்கப்படும். புயலில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.95,100; பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.52,000; சிறிய அளவில் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.3,200 இழப்பீடு வழங்கப்படும். புரி நகரில் 70 சதவீதமும், புவனேசுவரத்தில் 40 சதவீதமும் குடிநீர் விநியோகம் சீரடைந்துள்ளது என்றார் அவர்.
 எனினும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் எப்போதும் சீராகும் என்பது குறித்து பட்நாயக் எதுவும் கூறவில்லை. மின் விபத்துகள் எதுவும் ஏற்படாத வகையில் மின் விநியோகத்தை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
 புரி, குர்தா, கஞ்சம், ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பாலாசோர் ஆகிய மாவட்டங்களில் மின்கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 34-ஆக அதிகரித்ததாக மாநில தலைமைச் செயலாளர் ஏ.பி.பதி தெரிவித்தார். இதில், 21 உயிரிழப்புகள் புரியில் நிகழ்ந்துள்ளன. இதனிடையே, புவனேசுவரம், புரி நகரங்களில் தொலைதொடர்பு சேவைகள் பகுதியளவு சரி செய்யப்பட்டுள்ளதாகவும், புவனேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து ரயில் சேவைகள் தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 பல்வேறு மாநிலங்கள் உதவிக் கரம்
 புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஸாவுக்கு பல்வேறு மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. சத்தீஸ்கர் அரசு ரூ.11 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது. மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள்
 தலா ரூ.10 கோடியும், குஜராத் ரூ. 5 கோடியும் அறிவித்துள்ளன.
 ஒடிஸாவில் இன்று மோடி ஆய்வு
 புவனேசுவரம், மே 5: ஒடிஸாவில் பானி புயலால் பாதிப்பைச் சந்தித்துள்ள பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (மே 6) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார்.
 இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:
 பானி புயல் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய மோடி, ஒடிஸாவுக்கு திங்கள்கிழமை வருகிறார். புவனேசுவரத்தில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்துக்கு மோடி முதலில் வருகிறார். பின்னர் புரி, குர்தா, கட்டாக், ஜகத்சிங்பூர், ஜஜ்பூர், கேந்திரபாரா, பத்ரக், பாலாசோர் ஆகிய மாவட்டங்களில் பானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மோடி, ஹெலிகாப்டர் அல்லது விமானம் மூலம் சென்று பார்வையிடவுள்ளார். அதன்பின்னர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மாநில அரசு அதிகாரிகளுடன் மோடி ஆய்வு நடத்தவுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ஒடிஸா மாநிலம் புரியில் கடந்த வெள்ளிக்கிழமை பானி புயல் கரையைக் கடந்தது. இந்த புயலால், சுமார் 10,000 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த புயலில் பலியானோர் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ள நிலையில், மீட்புப் பணியை மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் தீவிரப்படுத்தியுள்ளன.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com