பெங்களூரு வந்த ரயில் 8 மணி நேரம் தாமதம்: நூற்றுக்கணக்கான மாணவர்கள் "நீட்' தேர்வு எழுத முடியாமல் தவிப்பு

பெங்களூருக்கு 8 மணி நேரம் தாமதமாக ரயில் வந்தடைந்ததால், வட கர்நாடகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் "நீட்' நுழைவுத் தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் நிலை உருவானது.

பெங்களூருக்கு 8 மணி நேரம் தாமதமாக ரயில் வந்தடைந்ததால், வட கர்நாடகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் "நீட்' நுழைவுத் தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் நிலை உருவானது.
 கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, பெலகாவி, தார்வாட், ஹுப்பள்ளி, தாவணகெரே, மங்களூரு, உடுப்பி ஆகிய 8 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர். இதனிடையே, ஹுப்பள்ளியில் இருந்து பெங்களூருக்குப் புறப்பட்ட ரயில் எண் 16591- ஹம்பி விரைவு ரயில் சனிக்கிழமை மாலை 6.20 மணிக்கு ஹுப்பள்ளியில் இருந்து புறப்பட்டு, பெல்லாரி ரயில் நிலையம் வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை 6.10 மணிக்கு பெங்களூரு வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால், இந்த ரயில் 8 மணி நேரம் தாமதமாக நண்பகல் 2.37 மணிக்கு வந்து சேர்ந்தது.
 இந்த ரயிலில் "நீட்' எழுதுவதற்காக வட கர்நாடகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர். ரயில் தாமதமாக வந்ததால், புறநகர்ப் பகுதிகளில் அமைந்திருந்த தேர்வு மையங்களுக்குச் செல்லமுடியாமல் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 'நீட்' தேர்வை எழுத முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இது பலரின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளதோடு, தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 முதல்வர் குமாரசாமி தனது சுட்டுரைப் பக்கத்தில், "கடைசி நேரத்தில் தேர்வு மையம் மாற்றப்பட்டதாலும், அது தொடர்பான தகவல் முறையாக தெரிவிக்கப்படாததாலும் மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் உடனடியாகத் தலையிட்டு, "நீட்' தேர்வை எழுதும் வாய்ப்பை இழந்தவர்களுக்கு மற்றொரு வாய்ப்பை அளிக்க கேட்டுக்கொள்கிறேன்' என்றார். முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், தனது சுட்டுரைப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார்.
 இதனிடையே, மாநில மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் இ.துக்காராம் கூறுகையில், "ரயில் தாமதமானதால், 'நீட்' தேர்வை எழுத வாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளிக்குமாறு மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதும்.
 தேர்வை எழுதும் வாய்ப்பை இழந்தவர்களின் பட்டியலைத் தயார்செய்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com