சுடச்சுட

  
  spu


  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக முன்னாள் பெண் ஊழியர் அளித்த பாலியல் புகாரில் நடவடிக்கைக்கான முகாந்திரம் இல்லை என்று கூறியுள்ள விசாரணைக் குழு, அந்தப் புகாரை நிராகரித்து விட்டது.
  உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இதுதொடர்பான மனுவை 22 நீதிபதிகளுக்கும் அவர் பிரமாணப் பத்திரமாக அனுப்பி வைத்தார். அதில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாக இரு சம்பவங்களைக் குறிப்பிட்டிருந்தார். 
  இந்தப் புகார்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்று மறுப்பு தெரிவித்த ரஞ்சன் கோகோய், இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி வலை இருப்பதாகக் கூறினார்.
  அந்தப் புகாரை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கன்னா ஆகியோரைக் கொண்ட அமர்வு கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி விசாரித்தது.  அந்த அமர்வுக்கு கோகோய் தலைமை வகித்தபோதிலும், உத்தரவு பிறப்பிக்கும் பொறுப்பை மற்ற இரு நீதிபதிகளிடம் ஒப்படைத்திருந்தார். விசாரணைக்குப் பிறகு நீதித்துறை சார்ந்த உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. 
  இதையடுத்து, பெண் அளித்த பாலியல் புகாரை விசாரிப்பதற்கு தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி எஸ்.ஏ.போப்டே மற்றும் நீதிபதிகள் ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோரைக் கொண்ட 3 பேர் அமர்வு கடந்த ஏப்ரல் 23-இல் அமைக்கப்பட்டது. ஆனால், நீதிபதி ரமணா, தலைமை நீதிபதிக்கு நெருங்கிய நண்பர் எனக் கூறி, விசாரணை அமர்வில் அவர் இடம்பெறுவதற்கு புகார் கூறிய பெண் எதிர்ப்பு தெரிவித்தார்.  இதையடுத்து, அந்த விசாரணைக் குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகிக் கொண்டார். அவருக்குப் பதிலாக, நீதிபதி இந்து மல்ஹோத்ரா சேர்க்கப்பட்டார்.
  புகார் அளித்த பெண் வெளிநடப்பு: நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான விசாரணைக் குழு, புகார் அளித்த பெண்ணிடம், நீதிபதிகளின் அலுவல் அறையில் 3 நாள்கள் விசாரணை நடத்தியது. விசாரணையின்போது, தனது தரப்பு வழக்குரைஞர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும்; விசாரணை நடவடிக்கைகளை விடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று அந்தப் பெண் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கைக்கு விசாரணைக் குழு மறுப்பு தெரிவித்ததால், கடந்த 30-ஆம் தேதி பாதியிலேயே விசாரணையில் இருந்து அந்தப் பெண் வெளியேறினார்.
  ரஞ்சன் கோகோய் ஆஜர்: அதைத் தொடர்ந்து, விசாரணைக் குழு முன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், மே 1-ஆம் தேதி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
  இந்நிலையில், நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு தனது விசாரணை அறிக்கையை, தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் உள்ள நீதிபதி அருண் மிஸ்ராவிடம் ஞாயிற்றுக்கிழமை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் நகலை, புகாரில் தொடர்புடைய ரஞ்சன் கோகோய்க்கும் அளித்தது.
  அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்களை உச்சநீதிமன்ற தலைமைச் செயலாளர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டது. அதில், தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரில் நடவடிக்கைக்கான  முகாந்திரம் இல்லை என்பதை விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணை அறிக்கை பொது வெளியில் வெளியிடுவதற்கு உகந்தது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பு-பெண் பேட்டி: இதனிடையே, உச்சநீதிமன்ற விசாரணைக் குழு, தலைமை நீதிபதிக்கு நற்சான்று அளித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தையும், மன வேதனையையும் ஏற்படுத்துவதாக உள்ளது என்று புகார் அளித்த பெண் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த விவகாரத்தில் எனது புகாருக்குத் தீர்வு கிடைக்காது என்று நான் கருதியது உண்மையாகி விட்டது; எனக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனது தரப்பு வழக்குரைஞரிடம் ஆலோசனை நடத்திய பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன் என்று கூறியுள்ளார்.

  தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரில் நடவடிக்கைக்கான  முகாந்திரம் இல்லை; விசாரணை அறிக்கையின் விவரங்கள் பொது வெளியில் வெளியிடுவதற்கு உகந்தது அல்ல.
  -விசாரணைக் குழு 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai