சுடச்சுட

  

  பயங்கரவாதிகளிடமிருந்து தேசத்தை காக்க மோடிக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

  By DIN  |   Published on : 07th May 2019 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  amithsha


  எல்லைக்கு அப்பால் இருந்து வரும் பயங்கரவாதிகளிடமிருந்து தேசத்தைக் காப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.
  பிகார் மாநிலம் கிழக்கு சாம்பரான் மாவட்டத்தில் திங்கள்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு அவர் பேசியதாவது:
  முன்பு ஒரு காலத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நமது நாட்டு எல்லைக்குள் புகுந்து, நமது வீரர்களின் தலையைத் துண்டித்துச் செல்லும் அவலநிலை இருந்தது. அப்போது நாட்டில் இருந்த பிரதமர் (மன்மோகன் சிங்) மெளன குருவாக இருந்தார். அவரை இயக்கி வந்தவர் (ராகுல் காந்தி) நமது நாட்டுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை வேடிக்கை பார்த்து வந்தார். இதற்கு வாக்கு வங்கி அரசியலும் முக்கியக் காரணம். காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது கைவைத்தால், இங்கு தனது வாக்கு வங்கி போய்விடும் என்பது அவர்களது கவலையாக இருந்தது. அவர்களின் இந்த அப்பட்டமான சுயநலத்தால், நமது ராணுவ வீரர்கள் பலர் உயிரைவிட நேரிட்டது.
   பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறினால், அவர்களுக்கு உரிய பதிலடி தரப்படுகிறது. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் நமது நாட்டில் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டுக்குள் புகுந்து பயங்கரவாத இயக்க முகாம்களை நமது விமானப்படை குண்டுகளை வீசி அழித்து விடுகிறது. நாட்டை இப்படியொரு பாதுகாப்பான சூழ்நிலையில் தொடர்ந்து வைத்திருக்கவும், பயங்கரவாதத்திடம் இருந்து தேசத்தை முழுமையாகக் காப்பாற்றவும் மோடிக்கு மீண்டும் வாக்களிக்க வேண்டும்.
  ராகுலின் கூட்டாளியான ஒமர் அப்துல்லா (தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்), ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தனி பிரதமர் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நாட்டை பிளவுபடுத்தத் தேவையான அனைத்து வேலைகளிலும் ஈடுபடும் அவரைக் கண்டிக்காத ராகுல் காந்தி, நாட்டின் ஒற்றுமைக்காக காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வோம் என்று கூறும் பாஜகவைக் குற்றம்சாட்டுகிறார். இந்தியாவில் இருந்து காஷ்மீரைப் பிரித்துவிட வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் பாகிஸ்தானுக்கும், அந்நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும் ஆதரவாக காங்கிரஸ் செயல்படுகிறது. ஆனால், காஷ்மீர் நமது நாட்டுடன் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அந்த மாநிலத்துக்கான மேலும் உறுதிப்படுத்தும் வகையில்தான் அங்குள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்துள்ளோம்.
  மக்களவைத் தேர்தலுக்காக நான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயணித்துவிட்டேன். பல்வேறு மொழிகளைச் சேர்ந்த மக்களைச் சந்தித்துவிட்டேன். நான் போகும் இடமெல்லாம் மோடி என்ற கோஷமே அனைத்து மொழிகளைச் சேர்ந்தவர்களும் கூறும் ஒரே கோஷமாக உள்ளது என்றார் அமித் ஷா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai