சுடச்சுட

  

  பிரதமர் மோடி மீதான தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மீறல் புகார்: கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

  By DIN  |   Published on : 07th May 2019 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi_amithsha


  பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் மீதான தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மீறல் புகாரை நிராகரித்த தேர்தல் ஆணையத்தின் அறிக்கையைக் கூடுதல் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய வேண்டுமென மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  மகாராஷ்டிர மாநிலம், வார்தாவில் கடந்த மாதம் 1-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, நாட்டில் பெரும்பான்மையினர் வசிக்கும் தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் தலைவர்கள் அச்சமடைந்துவிட்டனர். சிறுபான்மையினர் வாழும் தொகுதிகளையே அவர்கள் தேர்ந்தெடுத்து வருகின்றனர். ஹிந்துக்களை அக்கட்சி தலைவர்கள் அவமதிக்கின்றனர் என்றார். மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் கடந்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்களை நோக்கி, பயங்கரவாதிகளுக்கு எதிராக பாலாகோட்டில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு உங்களது முதல் வாக்கை சமர்ப்பணம் செய்வீர்களா? என்றார். இவை தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறியுள்ளதாகத் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்தது.
  காங்கிரஸின் புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், பிரதமர் மோடியின் பேச்சில் நெறிமீறல் எதுவும் இல்லை எனத் தெரிவித்துவிட்டது. இதையடுத்து, அஸ்ஸாம் மாநிலம் சில்சார் தொகுதியின் எம்.பி. சுஷ்மிதா தேவ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:
  நாடு முழுவதும் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டதிலிருந்தே பிரதமர் மோடியும், அமித் ஷாவும் பல மாநிலங்களில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில், பாதுகாப்புப் படையினர் குறித்து பிரசாரம் செய்து, நெறிமுறைகளை மீறி வருகின்றனர். ராணுவத்தின் செயல்பாட்டை அரசியல் ஆதாயத்துக்காக அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மக்களிடையே பிரிவினையை உண்டாக்கக் கூடிய வகையில் அவர்கள் பிரசாரம் செய்துவருவதற்கு அனைத்து ஆதாரங்களும் உள்ளன. இது தொடர்பாகப் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டபோதும், அவற்றின் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேட்பாளர்களிடையே தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்டி வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
  முறையாக ஆய்வு செய்யவில்லை: இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி, பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் மீது காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட புகார்களை முறையாக ஆய்வு செய்யாமல், தேர்தல் ஆணையம் அவற்றை நிராகரித்து, நடத்தை விதிமுறை மீறல் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளது என்று வாதிட்டார்.
  இதையடுத்து நீதிபதிகள், அவர்கள் இருவரின் மீதான தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மீறல் குறித்த புகாரைத் தேர்தல் ஆணையம் நிராகரிக்கும் உத்தரவுகளை இணைத்து கூடுதல் பிரமாணப் பத்திரத்தை மனுதாரர் தாக்கல் செய்ய வேண்டும் என்றனர். வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 8-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai