எனது தந்தையை அவமதித்தாலும் மோடி மீது அன்பு வைத்துள்ளேன்: ராகுல் காந்தி பேச்சு

தியாகியான எனது தந்தை ராஜீவ் காந்தியை நரேந்திர மோடி அவமதித்தாலும், அவர் மீது நான் அன்பு வைத்துள்ளேன் என்று ராகுல் காந்தி கூறினார். 
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார பேரணியில் பங்கேற்க வந்தபோது தொண்டர்களை நோக்கி உற்சாகமாக கையசைக்கும் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. 
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார பேரணியில் பங்கேற்க வந்தபோது தொண்டர்களை நோக்கி உற்சாகமாக கையசைக்கும் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. 


தியாகியான எனது தந்தை ராஜீவ் காந்தியை நரேந்திர மோடி அவமதித்தாலும், அவர் மீது நான் அன்பு வைத்துள்ளேன் என்று ராகுல் காந்தி கூறினார். 
சாந்தினி செளக் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜே.பி. அகர்வாலை ஆதரித்து திங்கள்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
நரேந்திர மோடி தன்னை காவலாளி என சொல்லிக் கொள்கிறார். தற்போது களவாணியாகப் பிடிபட்ட பிறகே, நாடு முழுவதும் நான்தான் காவலாளி என முழங்கி வருகிறார். இருப்பினும் களவாணி பிடிப்பட்டுள்ளார். அந்தக் காவலாளி தனது குருவான எல்.கே. அத்வானியை அவமதித்துள்ளார். அன்னை, பிதா,குரு ஆகியோரை மதிப்பது இந்நாட்டின் பண்பாடு ஆகும். மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியைக் கேட்க யாரும் தயாராக இல்லை. ஆனால், மக்களின் குரலை நரேந்திர மோடி கேட்டே ஆக வேண்டும். தில்லியில் எழும் குரல் நாடு முழுவதும் ஒலிக்க வேண்டும்.
ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும், தில்லியின் முகத்தை மாற்றுவோம், விவசாயிகளை இன்புறச் செய்வோம் போன்ற பாஜகவின் வாக்குறுதிகள் என்னவானது? இவை குறித்து மோடி ஏன் பேச மறுக்கிறார். மாறாக எனது தந்தை ராஜீவ் காந்தி குறித்து தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார். 
நாட்டின் பிரதமராக இருந்து கொண்டு முப்படை வீரர்களையும், தியாகிகளையும் மோடி அவமதித்து வருகிறார். இந்த மக்களவைத் தேர்தலில் மோடியை காங்கிரஸ் வீழ்த்தும். என்னையும், என் குடும்பத்தையும் எந்த அளவுக்கு மோடி வெறுக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் மீது நான் அன்பு காட்டுவேன். தியாகியான எனது தந்தை ராஜீவ் காந்தியை பிரதமர் மோடி அவமதித்தாலும், அவர் மீது அன்பு மட்டுமே வைத்துள்ளேன். 
வேலையின்மைப் பிரச்னைக்கு மோடி தீர்வு காணவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மக்களின் வரிப்பணத்தை எடுத்து அம்பானியின் பாக்கெட்டை நிரப்பியதுதான் மிச்சம். சாந்தினி செளக், கனாட் பிளேஸ் போன்ற பெரிய சந்தைகளில் வணிகர்களிடம் கேட்டால் மோடி அரசு எவ்வாறு வணிகத்தை சீரழித்துள்ளது என்பது தெரிய வரும். 
காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு நாட்டில் தொழில் தொடங்க எந்தவித முன் அனுமதியும் தேவைப்படாது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 22 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராகுல் காந்தி. 
கட்சியின் தில்லி தலைவரும், வட கிழக்கு தில்லி தொகுதி வேட்பாளருமான ஷீலா தீட்சித் பேசுகையில், மோடி தலைமையிலான கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் சொல்லிக் கொள்ளும் வகையில் எந்தவித சாதனைகளோ, திட்டங்களோ இல்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மூலம் இந்த ஆட்சியின் திறத்தை அறிந்து கொள்ள முடியும். மே 12-இல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களித்து, மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும். அப்போதுதான், தில்லியில் வளர்ச்சித் திட்டங்களைப் பார்க்க முடியும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com