காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாடுகளுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

ஜம்மு-காஷ்மீரில் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பொதுப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.


ஜம்மு-காஷ்மீரில் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பொதுப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி, வெடிப்பொருள்கள் நிரப்பிய கார் மூலம் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும்போது, பொதுப் போக்குவரத்தை அனுமதிப்பதில்லை என்று மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இப்போது தேர்தல் நடைபெற்று வருவதால் மே 31-ஆம் தேதி வரை பாதுகாப்புப் படை வீரர்கள் போக்குவரத்து அதிகம் இருக்கும். எனவே, அந்த தேதி வரை இந்த கட்டுப்பாடு கண்டிப்பாக அமலில் இருக்கும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு அறிவித்திருந்தது.
இதன்படி 270 கி.மீ. தொலைவுள்ள ஜம்மு-ஸ்ரீநகர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் புதன், ஞாயிறு ஆகிய இரு நாள்களில் மட்டும் பொதுமக்களின் வாகனங்கள் செல்லக்கூடாது. அதையும் மீறி ஏதாவது அவசர விஷயத்துக்காக அச்சாலையைப் பயன்படுத்த வேண்டும் என்றால் போலீஸாரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.  
காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவின்போது அவசரப் போக்குவரத்துக்காக இதுபோன்று அனுமதி வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. மாநில அரசின் இந்த முடிவுக்கு வர்த்தகர்கள், சுற்றுலாப் பயண ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இது பொருளாதாரரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், கட்டுப்பாடு சிறிது தளர்த்தப்பட்டு ஸ்ரீநகருக்கும், உதாம்பூருக்கும் இடையேயான நெடுஞ்சாலையில் மட்டும் பொதுமக்களுக்கான தடைகள் தொடரும். அந்தப் பகுதியில் தடையை நீக்குவது குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். அந்தப் பகுதியிலும் படிப்படியாகத் தடை விலக்கப்படும் என்று மாநில அரசு கடந்த 1-ஆம் தேதி அறிவித்தது.
எனினும், இதனை எதிர்த்து அவாமி தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் முஷாபர் ஷா, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், காஷ்மீர் மாநிலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் பொது போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த பிறகு வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த போக்குவரத்துக் கட்டுப்பாட்டை மாநில அரசு அறிவித்துள்ளது. எனவே, இதற்கு தடை விதிக்க முடியாது. அதே நேரத்தில் வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாள் மட்டும் காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போக்குவரத்துக் கட்டுப்பாட்டை அமல்படுத்தலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com