ஜார்க்கண்ட்: மகா கூட்டணியுடன் மோதும் பாஜக

பிகாரிலிருந்து பிரிந்து கடந்த 2000-ஆம் ஆண்டில் உதயமான ஜார்க்கண்ட் மாநிலம், தற்போது 4-ஆவது முறையாக மக்களவைத் தேர்தலை
ஜார்க்கண்ட்: மகா கூட்டணியுடன் மோதும் பாஜக

பிகாரிலிருந்து பிரிந்து கடந்த 2000-ஆம் ஆண்டில் உதயமான ஜார்க்கண்ட் மாநிலம், தற்போது 4-ஆவது முறையாக மக்களவைத் தேர்தலை சந்தித்துள்ளது. நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட இம்மாநிலத்தில், மொத்தமுள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு, காங்கிரஸ் அமைத்துள்ள மகா கூட்டணியுடன் ஆளும் பாஜக பலப்பரீட்சை நடத்துகிறது.
இந்தியாவிலேயே 40 சதவீத தாது வளங்களை கொண்டிருந்தாலும், ஜார்க்கண்டில் வறுமையும் அதிகம். இம்மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை சுமார் 3.2 கோடி. இவர்களில் 26.2 சதவீதம் பேர் பழங்குடி இனத்தவர். மொத்தமுள்ள 14 தொகுதிகளில் 5 தொகுதிகள் பழங்குடி இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.  
நிலக்கரி, இரும்பு தாது உள்ளிட்ட வளங்கள் இருப்பதால், மின் உற்பத்தி மற்றும் உருக்கு ஆலைகள் அதிகமுள்ளன. இத்துறையில் மாஃபியாக்களின் ஆதிக்கமும் பரவலாக காணப்படுவதால், தொழிலாளர்கள் சுரண்டலும், சுற்றுச்சூழல் பாதிப்பும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகளாக நீடிக்கின்றன. கந்து வட்டி கொடுமையால் விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாவதும் தொடர்கதையாக உள்ளது. இம்மாநிலத்தில் எழுத்தறிவு பெற்றோர் சதவீதம் 67.63 ஆகும். 


முக்கிய அரசியல் கட்சிகள்: பாஜக, காங்கிரஸ், முன்னாள் முதல்வர் சிபு சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, முன்னாள் முதல்வர் பாபு லால் மராண்டி தலைமையிலான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பி) , ராஷ்ட்ரீய ஜனதா தளம், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் ஆகியவை முக்கிய கட்சிகளாகும். ஜார்க்கண்ட் உருவாகி 19 ஆண்டுகளே ஆன போதிலும், இம்மாநிலம் கண்ட ஆட்சி மாற்றங்கள் அதிகம். இதனால், முதல்வர் நாற்காலியும் பலமுறை மாற்றம் கண்டிருக்கிறது. 
ஆனால், கடந்த 2014, டிசம்பரில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின், நிலையான அரசு அமைந்திருக்கிறது. முதல்வராக ரகுவர்தாஸ் பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் பாஜக அரசின் பதவிக்காலம் நிறைவடையும்போது, 5 ஆண்டுகளை பூர்த்தி செய்த முதல் முதல்வர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். மேலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினத்தை சாராத முதல் முதல்வரும் இவர்தான்.
கடந்த மக்களவை, பேரவை தேர்தல் நிலவரம்: கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், ஜார்க்கண்டில் தனித்து போட்டியிட்ட பாஜக, மொத்தமுள்ள 14 தொகுதிகளில் 12 இடங்களை கைப்பற்றி பெரும் வெற்றியை பதிவு செய்தது. அத்தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு சதவீதம் 40.7 ஆகும். காங்கிரஸ் கூட்டணியில் இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, 2 தொகுதிகளை கைப்பற்றியது. ராஷ்ட்ரீய ஜனதா தளமும் இடம்பெற்றிருந்த இக்கூட்டணிக்கு மொத்தமாக 24.6 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதே ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதத்தில் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. அதேசமயம், காங்கிரஸும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் தனித்து களமிறங்கின. இத்தேர்தலில், மொத்தமுள்ள 81 பேரவைத் தொகுதிகளில் 42 இடங்களைக் கைப்பற்றி பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தது.


மகா கூட்டணி: 2014-இல் கிடைத்த தோல்வியின் எதிரொலியாக, தற்போது எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு, மகா கூட்டணியை அமைத்துள்ளன. காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பி) கட்சியுடன் கைகோத்துள்ளது. மகா கூட்டணியில் காங்கிரஸ் 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 
சிபு சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 4 தொகுதிகளிலும், பாபு லால் மராண்டி தலைமையிலான தலைமையிலான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 
ஒரு தொகுதி (பலாமு) ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதில் அதிருப்தியடைந்த அக்கட்சி, காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட சத்ரா தொகுதியிலும் தனது வேட்பாளரை நிறுத்தியது.
13 தொகுதிகளில் பாஜக போட்டி: கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக, இம்முறை அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் கட்சியுடன் களமிறங்கியுள்ளது. இக்கூட்டணியில் பாஜக 13 தொகுதிகளிலும் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் கட்சி ஓரிடத்திலும் போட்டியிடுகின்றன.
கருத்து கணிப்புகள் கூறுவது என்ன? தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளின் முடிவுகள், பாஜக கூட்டணிக்கு 9 முதல் 11 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் எதிர்க்கட்சி கூட்டணிக்கு 3 முதல் 5 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றன. அதேசமயம், வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் கணக்கிட்டால், மகா கூட்டணிக்கு கணிசமான இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிரான மனநிலை காணப்படுவதால், தங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
4 கட்ட வாக்குப்பதிவுகள்: ஜார்க்கண்டில் சத்ரா, லோஹர்தாகா, பலாமு ஆகிய 3 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. கோடர்மா, ராஞ்சி, குந்தி, ஹசாரிபாக் ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 6-இல் தேர்தல் நடைபெற்றது. 3-ஆவது கட்டமாக கிரிதி, தன்பாத், ஜாம்ஷெட்பூர், சிங்பூம் ஆகிய தொகுதிகளில் மே 12-ஆம் தேதியும், 4-ஆவது கட்டமாக ராஜ்மஹால், தும்கா, கோட்டா ஆகிய தொகுதிகளில் மே 19-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தல் களத்தில் முன்னாள் முதல்வர் மனைவி!


ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் மனைவி கீதா கோடா, சிங்பூம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். ஒருங்கிணைந்த பிகார் மாநிலத்தின் ஜெகநாத்பூர் பேரவை தொகுதி பாஜக எம்எல்ஏவாக அரசியல் வாழ்க்கையை தொடங்கிய மதுகோடா, 2005-இல் அக்கட்சியிலிருந்து விலகினார். அதே ஆண்டு ஜார்க்கண்டில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2006-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவுடன் அவர் ஜார்க்கண்ட் முதல்வராக பொறுப்பேற்றார். அவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2008-இல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வாபஸ் பெற்றதை அடுத்து, முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், மதுகோடா உள்ளிட்டோரை கடந்த 2017-இல் சிபிஐ நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்தது. அவர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், இந்த தண்டனைக்கு இடைக்கால தடை விதித்த தில்லி உயர்நீதிமன்றம், அவர்களுக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது. மதுகோடாவும், கீதா கோடாவும் கடந்த ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

களத்தில் 3 முன்னாள் முதல்வர்கள்
ஜார்க்கண்டில் மக்களவை தேர்தல் களத்தில் அந்த மாநில முன்னாள் முதல்வர்கள் அர்ஜுன் முண்டா (பாஜக), பாபுலால் மராண்டி (ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா-பி), சிபு சோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா) ஆகியோர் உள்ளனர்.
பாஜக மூத்த தலைவரான அர்ஜுன் முண்டா, இந்த மாநிலத்தில் மூன்று முறை முதல்வராக பதவி வகித்தவர். இவர் குந்தி தொகுதியில் களத்தில் உள்ளார். இத்தொகுதியில் தற்போது பாஜக எம்.பி.யாக உள்ள கரிய முண்டாவுக்கு, அக்கட்சி சார்பில் மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.
ஜாம்ஷெட்பூர் தொகுதியிலிருந்து கடந்த 2009-இல் முதல் முறையாக மக்களவைத் தேர்வான அர்ஜுன் முண்டா, பின்னர் 2010-இல் முதல்வராக பொறுப்பேற்பதற்காக எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். தற்போது மக்களவைத் தேர்தலில் அவரை மீண்டும் களமிறக்கியிருக்கிறது பாஜக. இந்த தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா(பி) கட்சியின் தலைவரும், ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் முதல்வருமான பாபுலால் மராண்டி, கோடர்மா தொகுதியில் களத்தில் உள்ளார். பாஜகவில் இருந்தவரான இவர், 2006-இல் அக்கட்சியிலிருந்து விலகி, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பி) கட்சியை தொடங்கினார். தற்போதைய தேர்தலில் இக்கட்சி, மகா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.
ஜார்க்கண்ட் முதல்வராக 3 முறை பதவி வகித்தவரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபுசோரன்,  தும்கா தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், மக்களவைக்கு ஏற்கெனவே 7 முறை தேர்வு செய்யப்பட்டவர்.
தற்போதைய தேர்தல் களத்தில் உள்ள மூன்று முன்னாள் முதல்வர்களும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் அர்ஜுன் முண்டா, சிபு சோரன் ஆகியோர், பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். பாபு லால் மராண்டி, பொதுத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

ரகுவர் தாஸுக்கு கடும் சவால்
மகா கூட்டணி, உள்கட்சி பூசல் ஆகிய இரு காரணங்களால், தற்போதைய மக்களவைத் தேர்தல் ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸுக்கு கடும் சவாலாகவே உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். மேலும், பழங்குடியினரின் நில உரிமைகளை நீர்த்துப் போக செய்யும் முயற்சிகளில் ரகுவர் தாஸ் ஈடுபடுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள், பழங்குடியினர் மத்தியில் அவர் மீதான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள், நிகழாண்டு இறுதியில் நடைபெறுவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு அச்சாரமாக இருக்கும் என்பதால், ரகுவர் தாஸ் தீவிரமாக பணியாற்றி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து, தினமும் 12 முதல் 15 மணி நேரம் வரை அவர் பணியாற்றுவதாக பாஜகவினர் கூறுகின்றனர். ஏழை குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, அனைத்து கிராமங்களுக்கும் மின்விநியோகம் உள்ளிட்ட நலத் திட்டங்களை முன்வைத்து, ரகுவர் தாஸ் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com