ஜெய் ஸ்ரீ ராம் மந்திரத்தை அனைவரும் உச்சரிக்க வேண்டும் என பாஜக எதிர்பார்ப்பு: மம்தா தாக்கு

ஜெய் ஸ்ரீராம் மந்திரத்தை அனைவரும் உச்சரிக்க வேண்டும் என பாஜக எதிர்பார்ப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். 
ஜெய் ஸ்ரீ ராம் மந்திரத்தை அனைவரும் உச்சரிக்க வேண்டும் என பாஜக எதிர்பார்ப்பு: மம்தா தாக்கு


ஜெய் ஸ்ரீராம் மந்திரத்தை அனைவரும் உச்சரிக்க வேண்டும் என பாஜக எதிர்பார்ப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். 
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தின்போது திங்கள்கிழமை பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவினரும் மேற்கு வங்கத்தின் கலாசாரத்தை மாற்றியமைக்க நினைக்கின்றனர். மேற்கு வங்கத்தின் பான்கிம் சந்திர சட்டோபாத்யாயவால் முழங்கப்பட்ட வந்தேமாதரம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முழங்கிய ஜெய் ஹிந்த் ஆகிய மந்திரங்களைத்தான் மேற்கு வங்க மக்கள் முழங்குவார்கள். நல்ல மந்திர முழக்கங்கள் இருக்கும்போது, நீங்கள் (மோடி) எதற்காக உங்கள் மந்திரமான ஜெய் ஸ்ரீராம் மந்திரத்தை எங்களிடம் உச்சரிக்கிறீர்கள்? இந்த மந்திரத்தை முழங்கச் செய்வதன் மூலம் நீங்கள் மேற்கு வங்கத்தின் கலாசாரத்தை அழிக்க முயற்சிக்கிறீர்கள். 
மேற்கு வங்கத்தை பொருத்தவரை, தக்ஷ்ணேஷ்வர், தாராபித் மற்றும் கன்காளிதலா ஆகிய  பகுதிகளில் உள்ள காளி கோயில் புதுப்பித்து தரப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதாகக் கூறி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பாஜகவினரால், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் நாட்டின் ஒரு இடத்தில் கூட சிறிய ராமர் கோயிலைக்கூட கட்ட முடியவில்லை. ஆனால், நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் ஜெய் ஸ்ரீராம் மந்திரத்தை மட்டும் முழங்க வேண்டும் என்று பாஜகவினர் எதிர்பார்க்கின்றனர். பானி புயலை வைத்து பிரதமர் மோடி அரசியல் செய்ய நினைக்கிறார். நீங்கள் (மோடி) பானி புயலை வைத்து அரசியல் செய்ய நினைத்தால், நானும் அரசியல் பற்றி நன்கு அறிந்தவள்தான் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். 
கடந்த 2015, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் மேற்கு வங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போதும், புயல் மழையால் பாதிப்படைந்த போதிலும் மோடி தலைமையிலான மத்திய அரசு எந்தவிதமான நிவாரண உதவிகளையும் செய்யவில்லை. மோடி, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை மோசமான தலைவராக சித்தரித்து பேசியுள்ளார். ராஜீவ் காந்தி இந்த தேசத்துக்காக உயிரை விட்டவர்.  இறந்து போன ஒரு தலைவருக்கு மரியாதை தரப்பட வேண்டும். 
என்னை கொள்ளைக்காரி என்ற தொனியில் பிரதமராகிய நீங்கள் பேசியுள்ளீர்கள். நாட்டின் மாண்புமிக்க பதவியில் இருக்கும் ஒருவர் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசலாமா? நான் கொள்ளைக்காரி என்றால் நீங்கள் யார்? குஜராத்தில் மதக்கலவரத்தை தூண்டி விட்டு ரத்தக்கறை படிந்த கரங்களுக்கு சொந்தக்காரர் நீங்கள் அல்லவா? என்று பேசினார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com