தில்லி சாந்தினி சௌக் தாமரைக்கு சாதகமாகுமா?

பழைய தில்லி என அறியப்படும் சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதியில் சாந்தினி சௌக்,  ஷாலிமர் பாக்,  ட்ரி நகர்,  மாடல் டவுன், ஆதர்ஷ் நகர்,
தில்லி சாந்தினி சௌக் தாமரைக்கு சாதகமாகுமா?

பழைய தில்லி என அறியப்படும் சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதியில் சாந்தினி சௌக்,  ஷாலிமர் பாக்,  ட்ரி நகர்,  மாடல் டவுன், ஆதர்ஷ் நகர், மட்டியா மஹால், வாஜிர்பூர், சகுர் பஸ்தி, சதர் பஜார், பல்லிமாரான் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
வாக்காளர்கள் எண்ணிக்கை  அடிப்படையில்,  சாந்தினி சௌக் தொகுதி தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் சிறியது. மொத்தம் 15,57,403 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 8,45,815 பேர்,  பெண்கள் 7, 11,448 பேர், மூன்றாம் பாலினத்தவர் 140 பேர் உள்ளனர். 
இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் 18 சதவீதம், வைசியா 18 சதவீதம்,  இஸ்லாமியர்கள் 14 சதவீதம், பஞ்சாபியர்கள் 14 சதவீதம்,  தாழ்த்தப்பட்டவர்கள் 16 சதவீதம், பிராமணர்கள் 8 சதவீதம் உள்ளனர்.  வர்த்தகர்கள் சமுதாயம் அதிகம் நிறைந்த பகுதியாக சாந்தினி செளக் உள்ளது.
2014 மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் வர்தன் 4,37,938 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் ஆம் ஆத்மி வேட்பாளர் ஆசுதோஷை, 1,36,320 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் 1,76, 206 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பெற்றார்.
அத்தேர்தலில் பாஜக 44.58%, ஆம் ஆத்மி கட்சி 30.71%,  காங்கிரஸ் 17.94%, மற்றவர்கள் 6.77% வாக்குகள் பெற்றனர்.
 ஹர்ஷ் வர்தன்:  ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம், சீலிங் நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) ஆகியவை இத்தேர்தலில் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும் விவகாரங்களாக உள்ளன. 
தற்போது எம்பியாகவும்,  மத்திய சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அமைச்சராகவும்  உள்ள ஹர்ஷ் வர்தன் (64) பாஜக வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார். அடிப்படையில் மருத்துவரான இவர்,  மத்திய சுகாதார அமைச்சராக இருந்தவர்.  1994-இல் தில்லி  சுகாதார அமைச்சராக இருந்த போது பல்ஸ் போலியோ திட்டத்தை திறம்பட செயல்படுத்தியவர்.  
இவர் தில்லி கிருஷ்ணா நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் நான்கு முறை போட்டியிட்டவர், எம்எல்ஏவாக இருந்தவர். 2013 தில்லி பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டவர். இதனால், தில்லிவாசிகளுக்கு ஹர்ஷ்வர்தன் நன்கு அறிமுகமானவராக உள்ளார். 
ஜே.பி. அகர்வால்: தற்போதைய காங்கிரஸ்  வேட்பாளர் ஜே.பி. அகர்வால் (74)  நான்கு முறை எம்பியாகவும், தில்லி காங்கிரஸின் தலைவராகவும் இருந்தவர். தில்லியின் அனுபவமிக்க  காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர்.  மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது  பல முக்கிய குழுக்களில் உறுப்பினராக இருந்தவர். சாந்தினி சௌக் பகுதியின் பராத்திவாலி கலியைச் சேர்ந்தவர்.   1984,  89, 96 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு வென்றவர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களத்தில் உள்ளார்.  தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.
பங்கஜ் குப்தா: ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் பங்கஜ் குப்தா (52),  தொழில்முறை மென் பொறியாளர். பொறியியல் பட்டதாரியான இவர், கட்சியின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர்.  முதல் முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறார். 
அதிருப்தியில் வர்த்தகர்கள் 
சாந்தினி சௌக் தொகுதியில் ஏற்கெனவே காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல்,  சிக்கந்தர் பக்த், ஜே.பி. அகர்வால்,  விஜய் கோயல் ஆகியோர் போட்டியிட்டு வென்றுள்ளனர். ஷாஜஹானாபாத் எனும் பழைய தில்லி ஒரு காலத்தில் முகலாயப் பேரரசின் தலைநகராக இருந்த பெருமைக்குரியது. கலை,  கலாசாரத்தின் வளர்ச்சி மையமாகவும் திகழ்ந்தது. தற்போது,  போக்குவரத்து  நெரிசல்,  வாகன நிறுத்துமிடப் பற்றாக்குறை,  ஆக்கமிரப்பு,  அங்கீகாரமற்ற கட்டுமானங்கள், குடிமை  உள்கட்டமைப்பு வசதியின்மை  ஆகிய பிரச்னைகள் தொடர்கின்றன.  இதனால்,  இப் பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகளும், வர்த்தகர்களும் பரவலாகவே அனைத்துக் கட்சிகள் மீதும் அதிருப்தியில் உள்ளனர். தில்லியில் சீலிங் நடவடிக்கையின் போது,  சாந்தினி செளக் பகுதி தவிர மாடல் டவுன், ட்ரி நகர், ஷாலிமர் பாக், கமலா நகர் உள்ளிட்ட பகுதிகள் தப்பவில்லை. இதனால், வர்த்தகர்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. 
 பழைய தில்லி  பகுதி  குறுகலான சந்துகள், மக்கள் நெருக்கம்  அதிகம் உள்ளதாகும்.  மேலும், சிவில் லைன்,  தில்லி பல்கலைக்கழகம்,  திமர்பூரில் உள்ள காலனிகள் திட்டமிடப்பட்ட பகுதிகளாகும். ஆதர்ஷ் நகர், ஜஹாங்கீர்புரி போன்ற இடங்களில்  அங்கீகாரமற்ற காலனிகளும் சக்குர்பஸ்தியில்  குடிசை பகுதிகளும் அதிமாக உள்ளன.  இதனால், அந்தப் பகுதிகளில் குடிநீர், சாக்கடை, சாலை, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளை மக்கள் எதிர்கொள்ளும் சூழல் உள்ளது. பழைய தில்லி பகுதியில் வாகன நிறுத்துமிட வசதி, உள்கட்டமைப்பு வசதி ஆகியவை மிகத் தேவையாக உள்ளது.  எனினும்,  இப்பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பரில் மிகப்பெரிய ஷாஜஹானாபாத்  மறு மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டது.  இதில் சந்தைப் பகுதிகளில் பாதசாரிகள் செல்லும்  நடைபாதைகளை உயர்த்துவது, சிக்கலான கேபிள்களை அகற்றுவது, மின்விளக்கு வசதிகளை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேட்பாளர்கள் கூறுவது என்ன?
பாஜக வேட்பாளரும் அமைச்சருமான ஹர்ஷ் வர்தன் கூறுகையில் , மத்திய அரசு   பல்வேறு பணிகளை மக்களுக்கு  செய்துள்ளது. வர்த்தகர்களின் பிரச்னையைத் தீர்ப்பதற்காக  சுதந்திரமான ஓர் அமைப்பு ஏற்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.  கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியால்  காங்கிரஸும்,  ஆம் ஆத்மியும் விரக்தியில் உள்ளன. தில்லியில் ஏழு தொகுதிகளிலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் ஜே.பி. அகர்வால், தில்லியில் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய ஒரு பழைமையான கட்சியாக காங்கிரஸ் இருப்பதால், மக்கள் நிச்சயம் என்னை ஆதரிப்பார்கள்  என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.
ஆம் ஆத்மி வேட்பாளர் பங்கஜ் குப்தா, ஆம் ஆத்மி அரசின் சிறப்பான செயல்பாடுகளால் மக்கள் என்னை நிச்சயம் வெற்றி பெறச் செய்வார்கள். மேலும், மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அதற்கான கட்சியாக ஆம் ஆத்மியை அவர்கள் பார்க்கின்றனர் என்றார்.
வெற்றி வாய்ப்பு எப்படி?
பழைய தில்லி பகுதியில் முஸ்லிகள் உள்ளிட்ட சிறுபான்மையினர், வைசிய சமூகத்தினர் அதிகம் உள்ளனர். தற்போது களம் காணும் மூன்று முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும் வைசியா சமூகத்தினர்ஆவர்.  பிராமணர்கள் பாரம்பரியமாகவே பாஜகவுக்கும்,  முஸ்லிம் சமுதாயத்தினர் காங்கிரஸுக்கும் ஆதரவாக இருந்து வருவதாக அறியப்படுகின்றனர்.  2014-க்கு முன்பு வரை பாஜகவும், காங்கிரஸும் இத்தொகுதியில் மேலாதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால்,  கடந்த மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டதால்  காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் வாக்குகளை கபளீகரம் செய்துவிட்டது. இதனால்,  காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட கபில் சிபல் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
அதேபோன்று, பஞ்சாபி வாக்காளர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் ஆகியோரின் வாக்குகள் வேட்பாளர்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக உள்ளது.   இத்தொகுதியில் அதிகம் உள்ள முஸ்லிம்கள், வர்த்தகர்கள் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிப்பதில்  முக்கியப் பங்கு வகிப்பர் என கணிக்கப்படுகிறது.  காங்கிரஸ் வாக்கு வங்கியாகக் கருதப்பட்ட முஸ்லிம்கள், கடந்த முறை அதிகளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தனர். இந்த முறை அது தொடருமா? அல்லது அவர்கள் மீண்டும் காங்கிரஸுக்கு திரும்புவார்களா? அல்லது  மோடி அலையால் இத்தேர்தலிலும் தாமரை மலருமா ?  என்பதை மே 23-ஆம் தேதி வேளியாகும் தேர்தல் முடிவின் போது தெரிந்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com