பானி புயலில் மம்தா அற்ப அரசியல்: மோடி தாக்கு

பானி புயலை முன்வைத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அற்ப அரசியலில் ஈடுபடுகிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பானி புயலை முன்வைத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அற்ப அரசியலில் ஈடுபடுகிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
மேற்கு வங்க மாநிலம், தாம்லுக், ஜார்கிராம் ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டங்களில், பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசியதாவது: ஒடிஸாவில் பானி புயலால் ஏற்பட்ட சேதங்களை நேரில் ஆய்வு செய்துவிட்டு இங்கு வந்திருக்கிறேன். இம்மாநிலத்தில் புயல் பாதிப்பு குறித்து பேசுவதற்காக, மம்தா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்புகொண்டேன். பேச ஏற்கெனவே இரு முறை முயன்றேன். ஆனால், கர்வ குணம் கொண்டவரான அவர், என்னுடன் பேசவில்லை. அவர் என்னைத் தொடர்பு கொள்வார் என்று காத்திருந்தேன். ஆனால், அவரும் தொடர்புகொள்ளவில்லை. 
மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கும் மம்தா, புயல் பாதிப்பை எதிர்கொள்வதைவிட அற்ப அரசியல் செய்வதில்தான் ஆர்வத்துடன் உள்ளார். இப்போது கூட மம்தாவுடனும், மாநில அரசு அதிகாரிகளுடனும் பேச விரும்பினேன். ஆனால், அதிகாரிகளுடன் நான் பேசுவதைக் கூட மம்தா அனுமதிக்கவில்லை என்றார் மோடி.
மம்தாவுக்கு சவால்: இதனிடையே, சாலையொன்றில் மம்தாவின் வாகன அணிவகுப்பு சென்றபோது, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்ட மூன்று பேரை காவல்துறையினர் பிடித்துச் சென்ற சம்பவத்தை குறிப்பிட்டு, மோடி பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் மத வழிபாடுகள், பூஜைகளை மேற்கொள்வதற்கு கூட மக்கள் இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஜெய் ஸ்ரீராம் என்று உச்சரிப்பவர்கள், சிறையில் தள்ளப்படுகின்றனர். நான் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடுகிறேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்.
ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்ததைக் கூட மம்தா வரவேற்கவில்லை. வாக்கு வங்கிக்கு பயந்துதான், அவர் ஐ.நா.வின் அறிவிப்பை வரவேற்கவில்லை.
நாட்டின் பிரதமராகிவிடலாம் என்ற மம்தாவின் கனவு பலிக்காது. மேற்கு வங்கத்திலுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் அவரது கட்சிக்கு 10 இடங்கள் கிடைப்பது கூட கடினம். மம்தாவின் மிரட்டல், அச்சுறுத்தல் பாணி அரசியல் இனி எடுபடாது. அவரை தோற்கடிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்றார் மோடி.
முன்னதாக, மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி எந்த அக்கறையும் காட்டவில்லை. இது தொடர்பாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜியிடம் அவர் பேசவில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது.
மம்தா பதிலடி 
மேற்கு வங்க மாநிலம், கோபிபல்லவ்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மம்தா, பிரதமரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்தார்.


அவர் பேசியதாவது: 
பிரதமரின் தொலைபேசி அழைப்புகள், எனது அலுவலகத்துக்கு வந்தன. நான் அந்த நேரத்தில், புயல் பாதிப்பை கண்காணிப்பதற்காக கராக்பூரில் முகாமிட்டிருந்தேன். எப்படி அவரது அழைப்புகளை ஏற்க முடியும்? அவர் பிரசாரத்துக்காக வரும் கலைகுண்டா பகுதியில் ஆலோசனை கூட்டம் நடத்துவதற்காக, என்னை தொடர்பு கொண்டனர். பிரதமர் கைக்காட்டும் இடத்துக்கு செல்ல, நாங்கள் என்ன அவரது வேலைக்காரர்களா என்று மம்தா கேள்வியெழுப்பினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com