ரஃபேல் மறுஆய்வு-ராகுலுக்கு எதிரான மனு: மே 10-இல் ஒன்றாக விசாரணை

ரஃபேல் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனுவும் வரும் 10-ஆம் தேதி ஒன்றாக விசாரிக்கப்படும் என்று
ரஃபேல் மறுஆய்வு-ராகுலுக்கு எதிரான மனு: மே 10-இல் ஒன்றாக விசாரணை


ரஃபேல் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனுவும் வரும் 10-ஆம் தேதி ஒன்றாக விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக மத்திய பாஜக அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு இருப்பதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பரில் தள்ளுபடி செய்தது. மேலும், ரஃபேல் ஒப்பந்த நடைமுறைகளில் சந்தேகம் கொள்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
இத்தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சௌரி, யஷ்வந்த் சின்ஹா, மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் தொடர்பாக அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் உள்பட அனைத்து ஆவணங்களின் அடிப்படையிலும் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. 
இதையடுத்து ராகுல் காந்தி, நாட்டின் காவலாளி (பிரதமர் மோடி), திருடன் என்பதை உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டிருக்கிறது என்று கூறினார். இதையடுத்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மீது தனது சொந்தக் கருத்துகளைத் திணிப்பதாகவும், நீதிமன்றத் தீர்ப்பைத் தவறாகச் சித்திரிப்பதாகவும் கூறி, ராகுலுக்கு எதிராக பாஜக எம்.பி. மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தார். 
இந்த வழக்கில் அவருக்கு உச்சநீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து, விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்த ராகுல் காந்தி, தனது கருத்துக்காக வருத்தம் தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார். எனினும், அடைப்புக் குறிக்குள்தான் தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார். அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தவறு செய்திருந்தால், நீங்கள் (ராகுல்) ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவித்தனர்.
மேலும், ரஃபேல் மறுஆய்வு மனுக்களுடன் சேர்த்து, ராகுலுக்கு எதிரான மனுவும் மே 6-இல் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் கடந்த மாதம் 30-ஆம் தேதி தெரிவித்திருந்தனர்.
நீதிபதிகள் வியப்பு: இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு முன் மறுஆய்வு மனுக்கள் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, தனது தரப்பு வாதங்களை பிரசாந்த் பூஷண் தொடங்கியபோது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ராகுலுக்கு எதிரான மனு தொடர்பான ஆவணங்கள் எங்கே என கேள்வியெழுப்பினார். அதற்கு, ராகுலுக்கு எதிரான மனு மே 10-ஆம் தேதி பட்டியலிடப்பட்டுள்ளதாக பிரசாந்த் பூஷண் பதிலளித்தார்.
அதைக் கேட்ட தலைமை நீதிபதி, இரு விவகாரங்களையும் ஒன்றாகப் பட்டியலிட வேண்டும் என்று ஏற்கெனவே தெளிவாக கூறியிருந்தேன். அவை தனித்தனியாக பட்டியலிடப்பட்டிருப்பது மிகவும் வியப்பளிக்கிறது. இது எப்படி நடைபெற்றிருக்க முடியும்? என்று கேள்வியெழுப்பினார். மற்ற இரு நீதிபதிகளும் இதே கேள்வியை எழுப்பினர். பின்னர், இரு விவகாரங்களும் ஒன்றாக மே 10-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மே 13-ஆம் தேதி முதல் உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
விசாரணை தேதியை மாற்றியது யார்?
ரஃபேல் மறுஆய்வு மனுக்களும், ராகுலுக்கு எதிரான மனுவும் மே 6-இல் ஒன்றாக விசாரிக்கப்படும் என்று கடந்த மாதம் 30-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால், அன்றைய தினம் மாலையில் உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியான உத்தரவு நகலில், ராகுலுக்கு எதிரான மனு மே 10-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இதனால், விசாரணை தேதியை மாற்றியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக, அனில் அம்பானி-எரிக்சன் நிறுவனம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிமன்ற அமர்வின் உத்தரவை திருத்தியதாக உச்சநீதிமன்றத்தின் இரு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com