சுடச்சுட

  

  உச்சநீதிமன்றத்துக்கு வெளியே மகளிர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

  By DIN  |   Published on : 08th May 2019 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  demand

  தில்லி உச்ச நீதிமன்றம் அருகில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகளிர் அமைப்பினர்.


  உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிரான பாலியல் புகார் நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்துக்கு வெளியே  செவ்வாய்க்கிழமை மகளிர் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
  இந்திய தேசிய மகளிர் கூட்டமைப்பு, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி, உச்சநீதிமன்ற பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
  உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக முன்னாள் பெண் ஊழியர் அளித்த பாலியல் புகாரில் நடவடிக்கைக்கான முகாந்திரம் இல்லை என்று கூறிய விசாரணைக்குழு, அந்தப் புகாரை திங்கள்கிழமை நிராகரித்தது. 
  இந்நிலையில், இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தலைமை நீதிபதி பதவி விலக வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்துக்கு வெளியே பெண் வழக்குரைஞர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  உச்சநீதிமன்றம் அருகே போராட்டத்துக்கு அனுமதியில்லை என்பதால், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சில மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்திருந்த போலீஸார், அப்பகுதியில் 144 தடையுத்தரவையும் பிறப்பித்தனர்.
  போராட்டத்தை ஒருங்கிணைத்த இந்திய தேசிய மகளிர் கூட்டமைப்பின் செயலர் ஆனி ராஜா தினமணிக்கு அளித்த பேட்டி: குற்றம் சாட்டப்பட்டவரே அக்குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக் குழு அமைத்து  தீர்ப்பு வழங்கும் அவலம் நமது நாட்டில்  நடந்துள்ளது. நீதித்துறையின் அனைத்து நெறிமுறைகளும் இந்தக் குழு உருவாக்கத்தில் மீறப்பட்டுள்ளது. 
  மேலும், சட்டத்துக்கு புறம்பான முறையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  இது போன்ற குற்றச்சாட்டுகள் எழும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ராஜிநாமா செய்துவிட்டு அக்குற்றச்சாட்டை எதிர்கொள்வதுதான் மரபு. 
  இந்த விவகாரத்தில் அந்த மரபு மீறப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் தலைமை நீதிபதி பதவியில் நீடிப்பதை அனுமதிக்க முடியாது. அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இது தொடர்பாக முறைப்படி குழு அமைத்து விசாரிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
  இது குறித்து புதுதில்லி காவல் துணை ஆணையர் மதுர் வர்மா கூறுகையில், இப்போராட்டத்தையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். 
  போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று ஆண்கள், 52 பெண்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு மந்திர் மார்க் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றார்.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai