சுடச்சுட

  

  தலைமை நீதிபதி மீதான புகார்: விசாரணை அறிக்கை நகலை கோருகிறார் உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர்

  By DIN  |   Published on : 08th May 2019 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ranjan-gogai


  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர், இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையின் நகலை அளிக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.
  இந்த விவகாரம் குறித்து நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையில் விசாரணை நடத்திய 3 நீதிபதிகள் குழு, தனது அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் முகாந்திரமில்லை எனத் தெரிவித்து, அவர் மீதான புகாரை நீதிபதிகள் குழு தள்ளுபடி செய்திருந்தது. முன்னதாக, நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான விசாரணைக் குழு, புகார் அளித்த பெண்ணிடம், நீதிபதிகளின் அலுவல் அறையில் 3 நாள்கள் விசாரணை நடத்தியது. விசாரணையின்போது, தனது தரப்பு வழக்குரைஞர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும்; விசாரணை நடவடிக்கைகளை விடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று அந்தப் பெண் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கைக்கு விசாரணைக் குழு மறுப்பு தெரிவித்ததால், கடந்த 30-ஆம் தேதி பாதியிலேயே விசாரணையில் இருந்து அந்தப் பெண் வெளியேறினார்.
  தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், நீதிபதி எஸ்.ஏ. போப்டேவுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் கடிதம் எழுதியுள்ளார்.

  அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  விசாரணை நடத்திய நீதிபதிகள் குழுவின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை. இந்த விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையின் நகலைக் கூட எனக்கு நீதிபதிகள் குழு வழங்கவில்லை. இது அனைவருக்கும் நீதி என்ற கொள்கைகளை மீறும் செயலாகும்.
  புகார் தெரிவித்தவர் என்ற முறையில், விசாரணை அறிக்கையை பார்வையிட எனக்கு உரிமை உள்ளது. புகாருக்கு ஆளான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விசாரணை அறிக்கையின் நகல் அளிக்கப்படுகையில், புகார்தாரரான எனக்கும் அது அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்று அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai