சுடச்சுட

    

    தெலங்கானா முதல்வருடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது: பினராயி விஜயன்

    By DIN  |   Published on : 08th May 2019 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Pinarayi_Vijayan


    தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ்வை சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், வரும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைப்பதில்  பிராந்திய கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 
    கேரளத்துக்கு இரண்டு தினங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திங்கள்கிழமை கேரள முதல்வர் பினராயி விஜயனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ்  அல்லாத அரசு அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இன்னும் இரு கட்ட  வாக்குப்பதிவு நடைபெற வேண்டியுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 
    இந்த சந்திப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
    இது ஒரு முக்கியமான சந்திப்பு. தேசிய அரசியல் நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த முறை மத்தியில் ஆட்சியமைக்க எந்தக் கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றும், எனவே, மத்தியில் ஆட்சி அமைப்பதில் மாநில பிராந்தியக் கட்சிகளே முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்தார். 
    மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமானால் மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து, கூட்டமைப்பை ஏற்படுத்தி மத்தியில் ஆட்சியமைக்க முன்வர வேண்டும். அனைத்து மாநில கட்சிகளையும் ஒருங்கிணைத்து, கூட்டமைப்பை உருவாக்குவதன் மூலம்  மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க முடியும். இதன் மூலமாக மத்திய அரசின் அதிகார வரம்பைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 
    இருப்பினும், யாரை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்வது என்பது குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை.  
    இந்த தேர்தலைப் பொருத்தவரை மத்தியில் ஆளும் பாஜக அரசு தோல்வியைத் தழுவும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம், அடுத்ததாக அமைய உள்ள அரசு மதசார்பின்மையையும், கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் நாட்டின் ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையிலும் புதிய ஆட்சி இருக்கும் என்று பினராயி தெரிவித்தார். 
    இந்த சந்திப்பைத் தொடர்ந்து, 8ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு சந்திரசேகர் ராவ் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் செல்கிறார். 
    பினராயி நெதர்லாந்து பயணம்: ஐரோப்பியாவிலுள்ள நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் 8ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நெதர்லாந்து செல்கிறார். அங்கு வெள்ளத்தடுப்பு மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான உதவிகளை வழங்கக் கோரி இந்த சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொள்கிறார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai